தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தாலும், வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறவில்லை. தேர்தலுக்குப் பணத்தை இறைத்த வேட்பாளர்கள், முடிவை எதிர்நோக்கி உள்ளனர். ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலின்போது, வேட்புமனுவோடு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த வேட்புமனுக்களையும், பிரமாணப் பத்திரத்தையும், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். ஒவ்வொரு முறையும் பதிவிறக்கம் செய்யும்போது, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கும்.
அந்த வகையில், போடிநாயக்கனூரில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் மனு, இன்றைய நிலவரப்படி, 3,343 முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது பிரமாணப் பத்திரங்களின் தரவிறக்கம் என்பது, 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் ம.நீ.ம. வேட்பாளர் பத்மபிரியாவின் பிரமாணப் பத்திரம் 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவே, புதிய சாதனையாகப் பேசப்பட்டது. பத்மபிரியாவும் இந்தத் தகவலை கேட்டு ஆச்சரியப்பட்டார்.
ஆனால், இவர்களையெல்லாம் பின்னுக்குத்தள்ளி, பூம்புகார் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாளின் பிரமாணப் பத்திரம், 7 லட்சத்து 59 ஆயிரம் முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
யார் இந்த காளியம்மாள்?
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2019-ஆம் ஆண்டு, வடசென்னை தொகுதியில் நாம் தமிழர் சார்பில் போட்டியிட்டவர். அப்போது, 60,515 வாக்குகள் பெற்றார். நாடாளுமன்றத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் 66 முறை மட்டுமே தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை, பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டபோது, ஏழரை லட்சத்தைக் கடந்திருக்கிறது.
பிரமாணப் பத்திரத்தில் என்னென்ன இடம்பெற்றிருக்கும்?
வேட்பாளர்கள் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில், அவர்களது முழு விபரங்கள் இடம்பெற்றிருக்கும். கல்வித் தகுதி, வருமானம், கடன் தொகை, சொத்து விபரங்கள், வங்கிக் கணக்கு விபரங்கள் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் மனதையோ, ஆர்வத்தையோ எந்தத் தராசிலும் வைத்து எடைபோட்டுவிட முடியாது என்பதை, காளியம்மாளின் பிரமாணப் பத்திரம் தரவிறக்கம் செய்யப்பட்ட எண்ணிக்கை உறுதி செய்திருக்கிறது.