சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் 2019-20ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகத் தொடக்கவிழா தொலைதூரக்கல்வி இயக்கக நிர்வாக அலுவலகத்தில் நடை பெற்றது.
பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன் தலைமை வகித்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் கலந்து குத்துவிளக்கை ஏற்றி 2019-20ம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பத்தினை மாணவர்களுக்கு வழங்கி விநி யோகத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநர் பேராசிரியர் அருள் வரவேற்று பேசினார்.
புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், தொலைதூரக்கல்வி துறை ஒருங்கினைப்பாளர்கள், துணைவேந்தரின் மருத்துவத்துறை ஆலோசகர் டாக்டா சிதம்பரம், மருத்துவப்புல கண்காணிப்பாளர், இணை தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி, பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் துணைவேந்தர் முருகேசன் பேசுகையில், பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் இந்த ஆண்டு 53 படிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அறிவியல், கலை அறிவியல், மேலாண்மை, கல்வியில், தொழில்நுட்ப கல்வி, விவசாயகல்வி, கணினி, இசை மற்றும் யோகா போன்ற வேலை வாய்ப்பு சம்மந்தமான 268 படிப்புகள் நடத்தப்படுகின்றன. 2019-20ஆம் கல்வியாண்டில் புதிதாக கீழ்கண்ட முதுநிலை யோகா பட்ட மேற்படிப்பு உள்ளிட்ட 8 புதிய படிப்புகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
சென்ற கல்வியாண்டில் (2018-2019) தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் 98,839 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு 1லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 30ஆயிரம் வரை மாணவர் சேர்க்கைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு தற்போது தமிழகத்தில் 55 (அண்ணாமலைநகர் உட்பட), பிற மாநிலங்களில் 18 என மொத்தம் 73 படிப்பு மையங்கள் உள்ளன. மேலும் தொலைதூரக் கல்வி இயக்கக கல்வி கட்டணம் எக்காரணத்தை கொண்டும் உயர்த்தப்பட மாட்டாது.
தொலைதூரக்கல்வி இயக்ககம் மூலம் பயில விரும்புகின்ற மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து படிப்பு மையங்களிலும் இன்று(16ம் தேதி) முதல் விண்ணப்பங்களை பெற்று சேர்ந்து கொள்ளலாம். மேலும் பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in or www.audde.in மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் குறைதீர்க்கும் மைய தொலைபேசி எண்கள: 04144–238044 - 238047, 238610.தொலைதூரக்கல்வி இயக்கக மாணவர்களின் குறைதீர்க்கும் மைய மின்னஞ்சல் auddegrievance@gmail.comஆகும் என கூறினர்.