கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, "தனியொரு பெண்ணை ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் 'ஜெய் ஸ்ரீராம்' கோசம் எழுப்பியபடி துரத்திக்கொண்டு வருகிறது. பார்க்கும் போதே நெஞ்சு பதைக்கிறது. ஆனால் அந்தப் பெண் அச்சமற்று அவர்களை எதிர்கொள்கிறார். இதைத்தான் நாம் ஒவ்வொருவரும் ஆர்.எஸ்.எஸ்/ பா.ஜ.க. மதவெறி அரசியலுக்கு எதிராக செய்ய வேண்டும்.
பா.ஜ.க./ ஆர்.எஸ்.எஸ். மாணவர்களை, மதவெறியர்களாக, மாற்றிவருகிறது. ஆனால் இந்த இயக்கங்களின் தலைவர்கள் வீட்டுப் பிள்ளைகள் இப்படி வீதியில் இறங்கி காட்டுமிராண்டிகள் போல் நடந்து கொள்வதில்லை.வெளிநாடுகளில், புகழ்பெற்ற கல்லூரிகளில் படிக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
பா.ஜ.க. ஆட்சி செய்கிற மாநிலங்களில் மட்டுமே இந்த காட்டுமிராண்டி அரசியல் கட்டவிழ்த்து விடப்படுகிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா, பஞ்சாப், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மே.வங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இப்படி மாணவர்கள் மதவெறி பிடித்து அலைவதில்லை. பா.ஜ.க. இதை திட்டமிட்டு தூண்டுகிறது.
பா.ஜ.க./ ஆர்.எஸ்.எஸ். தமிழகத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே விரோதமானது. நாம் அவர்களை அச்சமற்று, நேர்நின்று எதிர்ப்பதன் மூலமே நமது பிள்ளைகளையும், நமது தேசத்தையும் காப்பாற்ற முடியும். தேச விரோத ஆர்.எஸ்.எஸ்./பா.ஜ.க.வை எதிர்ப்பதே உண்மையான தேசப்பற்று" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹிஜாப் தொடர்பான விவகாரத்தில் மோதலும், பதற்றமும் அதிகரித்துள்ள இந்தச்சூழலில், அம்மாநில கல்லூரிகளுக்கும் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.