
குளிர் காலத்தை அடுத்து, தற்போது கோடை காலம் எதிர்நோக்கி வருகிறது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால், இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தொடர்ந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகா மாநிலத்திலும் வழக்கத்தை விட வெப்பம் அதிகரித்து வருகிறது. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 37-39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை எட்டக்கூடும் என்று அறிவிப்புகள் வெளிவருவதால், கர்நாடகாவில் வசிக்கும் குடியிருப்பாளர்களை எச்சரிக்கும் வகையில் மாநில சுகாதாரத் துறை ஆலோசனை கூறியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, தளர்வான பருத்தி ஆடைகள் அணிய வேண்டும், தொப்பிகள் அல்லது குடைகளை உபயோகிக்க வேண்டும், நண்பகல் முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். தாகல் இல்லாவிட்டாலும் அடிக்கடி நீர்ச்சத்துக்கு தேவையான உணவுகளை எடுக்க வேண்டும், பயணத்தின் போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும், ஓஆர்எஸ், எலுமிச்சை நீர், மோர், உப்பு சேர்த்த பழச்சாறுகள், தர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு, வெள்ளரிகள் மற்றும் கீரை போன்ற நீர் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளிப்புற வேலைகள் தவிர்க்க முடியாததாக இருந்தால், காலை 11 மணிக்கு முன் அல்லது மாலை 4 மணிக்குப் பிறகு அதை மாற்றியமைக்க வேண்டும். கடுமையான கோடை காலநிலை தொடங்குவதால், சுகாதார அபாயங்களைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.