சென்னை தேனாம்பேட்டையில் முன்பு போக்குவரத்து காவல் ஆய்வாளராக இருந்தவர் ரவிச்சந்திரன். தனக்கு கீழ் பணியாற்றிய தருமராஜ் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவரை பாய்ந்து சென்று பிடித்து சர்ச்சையில் சிக்கியவர். இப்போது மீண்டும் ஒரு வில்லங்க வீடியோவில் சிக்கி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
அதாவது, அம்பத்தூர் மேம்பாலம் அருகே பணியில் இருந்த ரவிச்சந்திரன், வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த வீடியோ சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. இதன் அடிப்படையில் அவரை சஸ்பென்ட் செய்து, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு முன்பு தேனாம்பேட்டையில் பணியில் இருந்தபோது, தருமராஜ் என்ற தலைமைக் காவலருக்கு தாயின் நினவேந்தல் நிகழ்ச்சிக்கு விடுப்பு கொடுக்கவில்லை. அதனால், அவர் போதையில் மைக்கில் புலம்பியதால், மேலதிகாரிகள் ரவிச்சந்திரனை கூப்பிட்டு திட்டினர். இதனால், தருமராஜ் போதையில் இருந்தார் என்பதை உறுதிப்படுத்த, அவரை வரும் வழியில் காத்திருந்து, நடு ரோட்டிற்கு சென்று தருமராஜை பாய்ந்து பிடித்தார். இதில் தருமராஜூவுக்கு காயம் ஏற்பட்டது. அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது எல்லாம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் ரவிச்சந்திரன் சஸ்பென்ட் செய்யப்பட்டார். ஒரு மாதத்திற்கு பிறகு பணியில் சேர்க்கப்பட்ட அவருக்கு, அம்பத்தூர் போக்குவரத்து காவல் நிலையம் ஒதுக்கப்பட்டது. இப்போது மீண்டும் லஞ்சம் வாங்கிய வீடியோவில் சிக்கியிருக்கிறார்.