வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தின் பின் பக்கம், சமையல் அறையாக உள்ள கட்டடத்தின் சுவர் சேதம் அடைந்துள்ளதால் அதனைச் சீரமைக்கும் பணியில் கட்டடத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பெண், ஒரு ஆண் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த வேலூர் வடக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒரு மூதாட்டி, ராமமூர்த்தி என்கிற ஆண் என இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வேலூர் வடக்கு காவல்துறையினர், உணவகத்தைத் தற்காலிகமாக மூடி உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்கள் இன்று புதியதாகக் கூலி வேலைக்கு வந்ததுள்ளனர். மேலும் இடிந்து விழுந்த கட்டடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது என்றும் மழை காரணமாகப் பலவீனமாக இருந்ததால் இடிந்து விழுந்துள்ளதாகவும் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.