Skip to main content

ஊட்டச்சத்தாக முட்டை வழங்கினால் மாணவர்கள் பயனடைவார்கள்! -தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published on 20/07/2020 | Edited on 20/07/2020
highcourt chennai

 

ஊட்டச்சத்தாக முட்டை வழங்கப்பட்டால், 48,56,000 மாணவ,  மாணவிகள் பயனைடைவார்கள், முட்டை உற்பத்தியாளர்களுக்கும் உதவியாக இருக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.சுதா  தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், கரோனா தொற்று காரணமாக தற்போது அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மதிய உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயன்பெறமுடியாத சூழல் உள்ளது. இதனால்,  நடுத்தர மற்றும் அடித்தட்டு குடும்பங்களில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த குடும்பங்களின் வாழ்வாதாரம், அரசு தரும் ஆயிரம் ரூபாயை நம்பியே இருக்கிறது. மேலும், கரோனாவைத் தடுப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்பட வேண்டும். எனவே, குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை வழங்குவதற்கு அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். அம்மா உணவகங்களில் இலவசமாக முட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

 

highcourt chennai


இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க,  முட்டை உள்ளிட்ட  உணவுகள் வழங்குவதற்கு அரசிடம் ஏதாவது திட்டம் உள்ளதா என்பது குறித்து,  உரிய பதில் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர்.

 

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முட்டை வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாகவும், மேலும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்க முடியாது என்றும், அம்மா உணவகங்களில் முட்டை வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஊட்டச்சத்தாக முட்டை வழங்கப்பட வேண்டும். அதனால், 48,56,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.  அது,  முட்டை உற்பத்தியாளர்களுக்கும் உதவியாக இருக்கும். முட்டை வழங்குவது தொடர்பாக அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறித்த  உரிய பதிலை வருகிற திங்கட்கிழமை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்