Skip to main content

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம்!

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

Chennai High Court grants conditional bail to former minister Manikandan

 

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிவிட்டதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததுடன், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் தலைமறைவான மணிகண்டனை அடையாறு அனைத்து மகளிர் போலீசார்  ஜூன் 20ஆம் தேதி கைது செய்தனர்.

 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, தனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது தெரிந்தே, ஐந்து ஆண்டுகள் தன்னுடன் நடிகை கணவன் - மனைவியாக வசித்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை என்ற கேள்வியே எழவில்லை என்றும், கருக்கலைப்புக்கு நடிகையே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மணிகண்டன் தரப்பில் வாதிடப்பட்டது.

 

புகார்தாரரான நடிகை சாந்தினி தரப்பில், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்துகொள்வதாக கூறியதால் அவருடன் கணவன் - மனைவியாக வாழத் துவங்கியதாகவும், ஏமாற்றிய மணிகண்டனின் ஜாமீனை நிராகரிக்க வேண்டுமென வாதிடப்பட்டது. செல்வாக்கான நபர் என்பதால், சாட்சிகளைக் கலைக்கக் கூடும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், நேற்று (07.07.2021) அளித்த தீர்ப்பில், மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, 2 வாரங்களுக்கு காவல்துறை முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திடவும், விசாரணைக்குத் தேவைப்படும்போதெல்லாம் ஆஜராகவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மணிகண்டனின் பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்