கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது
இந்த நிலையில் சுற்றுலாவிற்காகத் தமிழகம் வந்த சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் சிக்கித் தவித்த மலேசிய நாட்டைச் சேர்ந்த 100- க்கும் மேற்பட்டோர் சிறப்பு விமானம் மூலம் மலேசியாவிற்குத் திரும்பினர்.
அதன் தொடர்ச்சியாக இன்று (10/04/2020) சென்னை விமான நிலையத்தில் இருந்து 103 பெண்கள், 30 சிறுவர், சிறுமிகள், 5 கைக்குழந்தைகள் உள்பட 268 சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் டைகர் ஏர்வேஸ் விமானத்தில் சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.