Skip to main content

மகன்கள் கண் முன்னே ரவுடி கொலை;  இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

chennai adambakkam srinivasan incident due to unknown team

 

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40). ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவாகி நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சீனிவாசன் தனது வீட்டின் அருகில் வசித்து வந்த உறவினர் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது இரு மகன்களுடன் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்றார்.

 

அப்போது அங்கு நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட  கும்பல் ஒன்று சீனிவாசனை சரமாரியாக அரிவாளால் தாக்கியது. இதனை கண்டு துக்க வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து பதறியடித்து ஓடியுள்ளனர். மர்ம கும்பல் சீனிவாசனை தாக்கியபோது அவருடைய 17 வயது மற்றும் 15 வயதுடைய மகன்கள் அந்த கும்பலிடம் இருந்து தங்களது தந்தையை பாதுகாக்க முயன்றனர். இருப்பினும் மர்ம நபர்கள் இவர்கள் இருவரையும் தாக்கினர். மேலும் அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

இதையடுத்து சீனிவாசனையும் மகனையும் தாக்கிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் காயமடைந்த அவரது 2 மகன்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சீனிவாசன் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கிலும், கடந்த 2021 ஆம் ஆண்டு ரவுடி நாகூர் மீரான் என்பவர் கொலை வழக்கிலும் சிறைக்குச் சென்று வந்தார். எனவே இந்த கொலை சம்பவங்கள் தொடர்பான முன்விரோதம் காரணமாக சீனிவாசன் கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த 10 பேரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக ஆதம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வீரமணி தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்