
ஈரோட்டில் வாழைப் பழங்களை பழுக்க வைக்க ரசாயனம் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென இன்று நேரில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரகள், வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை செய்தார்கள்.
ஈரோடு நகரில் இயங்கும் நேதாஜி மார்க்கெட்டில் வாழைப் பழங்களை பழுக்க வைக்க ஸ்பிரே முறையில் ரசாயனத்தை தெளிக்கும் காட்சிகள் வாட்ஸ் ஆப்பிள் வைரலானது. அந்தக் காட்சியில் ஊழியர் ஒருவர், வயல்களில் பூச்சி மருந்து தெளிக்க பயன்படுத்தும் ஸ்பிரேயர் மூலம் ஒவ்வொரு வாழைத்தாருக்கும் ஸ்பிரே அடிப்பதும் பதிவாகி இருந்தது. இது முற்றிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
இந்தக் காட்சியை அடிப்படையாக கொண்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் உள்ள பழ மண்டிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்கள். இந்த சோதனையில் ஸ்பிரே அடிப்பது ஏதும் கண்டறியப்படவில்லை. ஆயினும், சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட ரசாயனங்களை கொண்டு பழங்களை பழுக்க வைக்க கூடாது என அதிகாரிகள் வணிகர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
இது குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.கலைவாணி கூறும் போது, “பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும், ரசாயனங்களை பயன்படுத்த அனுமதி கிடையாது. இது சட்டப்படி தவறானது. ஈரோடு மார்க்கெட்டில் ரசாயனம் ஸ்பிரே அடிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடத்தினோம். வணிகர்கள் இயற்கையான முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டும் என எடுத்து கூறி உள்ளோம். மீறி யாரேனும் ரசாயனம் பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து எங்கள் அதிகாரிகள் கண்பாணிப்பு பணியை மேற்கொள்வார்கள்" என கூறினார்.