இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றது. தொடர்ந்து இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்துள்ளது சந்திரயான் - 3.
உலக நாடுகளே உற்று நோக்கிக் கொண்டிருந்த நிலையில் திட்டமிட்டபடி நிலவில் கால்பதிக்க வேண்டும் என்று ஆலங்குடி சிவன் கோயில் உட்பட புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சந்திரயான் நிலவில் கால் பதிப்பதை காண கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளை ரத்து செய்து மாணவிகளை அனுப்பி வைத்த ஆசிரியர் இது பற்றிய கட்டுரை எழுதவும் அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் திட்டமிட்ட நேரத்தில் சந்திரயான் - 3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதும் புதுக்கோட்டையில் தொடங்கி மாவட்டம் முழுவதும் இனிப்புகள் வழங்கிய இளைஞர்கள், கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். உலகமே கொண்டாடும் இந்த சாதனையில் தமிழர்கள் இருப்பது மிகப் பெரிய பெருமை என்கிறார்கள் இளைஞர்கள்.