காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, மீண்டும் பழைய பணியிடத்திலேயே ஜூலை 5ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இது, நேர்மையான ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்தவர் கணேஷ்மூர்த்தி. போட்டித்தேர்வு மூலம் நேரடி கல்வி அலுவலராக பள்ளிக்கல்வித்துறையில் பணியில் சேர்ந்த இவர், அரசியல் மற்றும் அதிகார மையங்களுக்கு அசைந்து கொடுக்காமல் மேற்கொண்ட சில துணிச்சலான அதேநேரம் நேர்மையான நடவடிக்கைகளால் அடிக்கடி இடமாறுதல் செய்யப்பட்டு வந்தார்.
கடைசியாக கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கணேஷ்மூர்த்தி, கடந்த ஆண்டு சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். இங்கு வந்த பதினோரு மாதத்திற்குள்ளாகவே கடந்த ஜூன் 7ம் தேதியன்று மாலை திடீரென்று, அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
பள்ளிக்கல்வித்துறையைப் பொருத்தமட்டிலும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவது என்பது இதுதான் முதல்முறை என்பதால், கணேஷ்மூர்த்தி மீதான நடவடிக்கை குறித்து பல்வேறு தரப்பிலும் பல விதமான யூகங்கள் கிளம்பின. சேலம் மாவட்டத்தில் உள்ள முதல்வருக்கு நெருக்கமான ஒருவரின் சிபாரிசை ஏற்காததால்தான் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கியடிக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டன.
இதற்கிடையே, தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியையும் கூடுதலாக கவனித்து வந்தார்.
இது ஒருபுறம் இருக்க, கணேஷ்மூர்த்தியை தவறான நோக்கத்துடன் ஆசிரியர்களோ, ஆசிரியர் சங்க நிர்வாகிகளோ அல்லது அரசியல் புள்ளிகளோ நெருங்க முடியாது. அந்தளவுக்கு அவர் பணியில் நேர்மையானவர் என்றும், கையூட்டு போன்ற சர்ச்சைகளில் இருந்து அவர் எப்போதும் விலகியே இருக்கக்கூடியவர் என்றும், அவரைப்போன்ற அதிகாரிகள்தான் முதல்வர் மாவட்டத்தில் இருக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் தரப்பிலிருந்தே கருத்துகள் எழுந்தன.
இந்நிலையில், கணேஷ்மூர்த்தியை மீண்டும் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஜூலை 5ம் தேதி மாலையில் உத்தரவிட்டார். இந்த உத்தரவு வெளியான அடுத்த ஓரிரு மணி நேரத்தில் கணேஷ்மூர்த்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதுகுறித்து தாமதமாகவே ஆசிரியர்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, நகர்ப்புறத்தில் உள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலரும் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.