"நாடாளுமன்ற மற்றும் 22 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் என்கிற உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது. இது ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கின்ற கேவலமான முயற்சி" என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ER ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
![eswaran](http://image.nakkheeran.in/cdn/farfuture/eF92jZII4eqCv4G9aYFWX4AH9iKw86UI15TEpSp2H5w/1556347655/sites/default/files/inline-images/eswaran_12.jpg)
மேலும் அவர் கூறும்போது, "இப்போது தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. 4 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் குறிப்பிட்ட சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை எடுக்க முயற்சிப்பது அதிமுகவின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது. இதற்கு மத்திய பா.ஜ.க. மோடி அரசும் துணை போகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு எப்படியாவது ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இதுவரை எந்த மாநிலத்திலும் நடக்காத முன் உதாரணத்தை தமிழக ஆட்சியாளர்கள் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் முடிவு வரும்வரை இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அவசர அவசரமாக அ.தி.மு.க. அரசு முயற்சிக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க நடவடிக்கை அவர்களுடைய தோல்வி பயத்தை காட்டுகிறது. வெற்றியும், தோல்வியும் ஜனநாயகத்தில் சகஜம். யார் ஒருவரும் எப்போதும் ஆளும் கட்சியாகவே இருந்துவிட முடியாது. நடந்து முடிந்திருக்கின்ற, மற்றும் நடக்கின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் தேவையான வெற்றியை ஆட்சியாளர்கள் பெற முடியவில்லை என்றால் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, குறுக்கு வழியில் ஆட்சியை காப்பாற்றி கொள்ள இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்க கூடாது.
அதிமுகவினுடைய இத்தகைய நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறக்க கூடாது. சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற உணர்வுள்ள தமிழக மக்கள் நடக்கப்போகின்ற 4 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அதிமுகவின் சர்வாதிகார போக்கை எதிர்த்து வாக்களிக்க வேண்டும். இனி எதிர்காலத்தில் யாருக்கும் இதுபோன்ற எண்ணங்கள் வராமல் இருக்க அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டும்" என்றார்.