Skip to main content

“உங்களில் ஒருவனாக, சராசரி மனிதனாகவே இருக்க விரும்புகிறேன்” - துரை வைகோ எம்.பி

Published on 22/03/2025 | Edited on 22/03/2025

 

durai vaiko mp attends Air India Express launched its first domestic air service in Trichy on the Chennai - Trichy route

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி டெல்லியில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகத்துக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ நேரில் சென்று, அங்கிருந்த உயர் அதிகாரிகளைச் சந்தித்து திருச்சிக்கான விமான சேவை குறித்து தனது கோரிக்கையை முன்வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், திருச்சியில் முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையை இன்று (22-03-25) சென்னை - திருச்சி வழித்தடத்தில் தொடங்கியது. 

இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ கலந்து கொண்டார். முதல் உள்நாட்டு விமான போக்குவரத்தை தொடங்கி வைக்கும் விதமாக, முதல் பயண அனுமதி அட்டை எம்.பி துரை வைகோவுக்கு வழங்கப்பட்டது.

அதன் பின்னர், பயணிகள் மத்தியில் பேசிய துரை வைகோ, ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமான சேவை, திருச்சி விமான நிலைய வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. திருச்சி சுற்றுவட்டார பகுதி மக்களின் தேவையை இது பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது. இதுவரை 37 பன்னாட்டு விமான சேவைகளை செயல்படுத்திக் கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், திருச்சியில் கூடுதலாக உள்நாட்டு போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். எனது கோரிக்கை ஏற்கப்பட்டதால், திருச்சி மற்றும் 11 சுற்று வட்டார மாவட்ட மக்களின் தொழில் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சிக்கு பெரிதாய் பங்காற்றும். 

durai vaiko mp attends Air India Express launched its first domestic air service in Trichy on the Chennai - Trichy route

மக்களுடன் இணைந்து இந்த தருணத்தை கொண்டாடத்தான் இன்று இந்த பயணத்தை மேற்கொள்கிறேன். திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவுடன், இந்த ஐந்தாண்டு காலத்தில் திருச்சியை அனைத்து வழிகளிலும் மேம்படுத்துவேன் என்று உறுதியெடுத்தேன். அதில், போக்குவரத்து தொடர்புகளை (connectivity) மேம்படுத்துவது மிக முக்கியம் என்பதால், விமானம், இரயில், சாலை போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக விமான போக்குவரத்து துறை, இரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறையினருடன் இடைவிடாது பணியாற்றி வருகிறேன்.மேலும், மார்ச் 30 ஆம் தேதி திருச்சி மும்பை விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அதுபோல இன்னும் பல உள்நாட்டு விமான சேவை திருச்சியிலிருந்து விரைவில் தொடங்கப்பட வேண்டிய பணிகளும் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, திருச்சி தமிழ்நாட்டின் மையப் பகுதியாக உள்ளது. இங்குள்ள விமான நிலையமும் அதன் சேவைகளும் வளர்ந்தால், இப்பகுதி முழுவதும் வளர்ச்சி பெறும்; மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். எனவே, விமான நிலைய மேம்பாடு மற்றும் விமான சேவை பணிகளில் தனிக்கவனம் செலுத்தி, தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். திருச்சி விமான நிலையம் வளர்வதால், திருச்சி மற்றும் சுற்றியுள்ள 11 மத்திய மாவட்டங்களும் பயனடையும். தொகுதியில் தொழில் வளர்ச்சி மேம்படும்; தஞ்சை டெல்டா மற்றும் மத்திய மாவட்ட விவசாயிகள் தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்து வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும்; இந்த விமான சேவை ஐஐஎம்(IIM), என்ஐடி (NIT) போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு உறுதுணையாக அமையும்; வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பெரிதும் பயன்படும். இதற்காக திருச்சி விமான நிலை மேம்பாட்டு பணிகள் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

durai vaiko mp attends Air India Express launched its first domestic air service in Trichy on the Chennai - Trichy route

15 ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் இருந்த திருச்சி விமான நிலைய ஓடுதள (Runway) விரிவாக்கப் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து, நிலங்களைக் கையகப்படுத்தி, ஓடுதள விரிவாக்கப்பணி 99% முடிவடைந்துள்ளது. இதனால், பல வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் திருச்சிக்கு தங்கள் சேவையை விரிவுபடுத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது. விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உணவு மற்றும் வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு உகந்த கார்கோ விமான சேவைக்கும் குரல் கொடுத்து வருகிறேன். அது விரைவில் நடைமுறைக்கு வரும். அடுத்த வாரம், மார்ச் 30 அன்று திருச்சி - மும்பை விமான சேவையைத் தொடங்குவதாகவும் அறிவித்துள்ளது. மேலும், திருச்சியிலிருந்து பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, கோவா மற்றும் திருச்சி - டெல்லிக்கு நேரடி விமான போக்குவரத்து உள்ளிட்டவை தொடங்க உள்ளது.

இன்று, சென்னை - திருச்சிக்கு புத்தம் புதிய போயிங் (Boeing) ரக பெரிய விமானத்தை இயக்கியது பாராட்டத்தக்கது. குறைந்த பயண நேரம், சாதாரண கட்டணத்தில், நல்ல தாராளமான இருக்கைகளோடு மக்களின் பயணத்தை எளிதாக்கி, பயணிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இதற்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களில் ஒருவனாக, சராசரி மனிதனாகவே இருக்க விரும்புகிறேன். நல்ல அரசியல்வாதியாக, திருச்சி மக்கள் அளித்த ஒவ்வொரு வாக்கையும் எனக்கு இட்ட கட்டளையாகக் கருதுகிறேன். நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை பதவியாகக் கருதவில்லை; பொறுப்பாகவே பார்க்கிறேன்” என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் கே.என் நேருவும் கலந்துகொண்டு, துரை வைகோவுடன் விமானத்தில் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்