
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது கடைக்கோடி கிராமங்களில் ஒன்று வரைவன்பட்டி கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 25 முதல் 30 மாணவர்கள் படித்து வந்தனர். பள்ளியைச் சுற்றியுள்ள பாலக்குறிச்சி உள்ளிட்ட பக்கத்து கிராமத்தில் இருந்து மாணவ மாணவர்கள் படித்து வந்தனர். ஆனால் தற்போது 7 மாணவ மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக திண்டுக்கல் மாவட்டம் கொசுவப்பட்டியைச் சேர்ந்த அந்தோணி என்பவர் பணியாற்றி வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளிக்கு பணிக்கு வந்தபோது அந்தோணி சிறப்பாக செயல்பட்டார். ஆனால் கடந்த 5,6 ஆண்டுகளாக இவரது செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வைரவன்பட்டி குழந்தைகளை பக்கத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். அரும்பாடுபட்டுக் கொண்டு வந்த நம்ம ஊரு பள்ளியை மூடிவிடக் கூடாது என்பதால் ஆசிரியர் அந்தோணியின் செயலைக் கண்டு மனம் வருந்தினாலும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளிக்கே அனுப்பி வருகின்றனர்.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தோணி அப்படி என்ன தான் செய்கிறார் என்ற கேள்வியை முன்னாள் ஊ.ம. தலைவர் பெரிய பொன்னனிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், “நல்லா இருந்த பள்ளியை நாசமாக்கிவிட்டார் இந்த தலைமை ஆசிரியர் அந்தோணி. பல நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை வரும் சில நாட்களும் மாணவர்களை குமட்ட வைக்கும் செயலைத் தான் செய்து வருகிறார். பள்ளி நேரத்தைக் கடந்து வந்தாலும் மதுப்பாட்டிகளோட தான் வருகிறார். இவருக்கு துணைக்கு என்று ஒரு இளைஞர் மது பாட்டில்கள், இட்லி போன்ற உணவுகளையும் வாங்கி வர மாணவர்கள் முன்னிலையிலேயே வகுப்பறையில் வைத்து இருவரும் மது அருந்திவிட்டுக் கொண்டு வந்த உணவையும், தின்பண்டங்களையும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பல நாட்கள் மது குடித்த பிறகு ஆசிரியர் அந்தோணி வகுப்பறையிலேயே வாந்தி எடுத்திருக்கிறார். அதை மாணவர்களே அள்ளி சுத்தம் பண்ணி இருக்காங்க. பள்ளி வளாகம் முழுவதும் மதுப் பாட்டில்கள் தான் நிறைந்து கிடக்கிறது. மாணவர்களிடம் கேளுங்க எல்லாமே அவங்களே சொல்வாங்க. பல நாட்கள் பள்ளிக்கு வரமாட்டார். ரூ.2000 சம்பளத்தில் ஒரு பெண்ணை பாடம் நடத்த வைத்திருந்தார். அந்த பெண்ணும் திருமணமாகி போனதால இப்ப ஆசிரியர் வரலன்னா மாணவர்கள் மட்டும் தான் இருந்து படிக்கவேண்டும். இது போல எங்கள் பள்ளியை நாசமாக்கும் ஆசிரியரை மாற்றுங்கன்னு இப்போது இருக்கும் இதே பொன்னமராவதி வட்டாரக்கல்வி அலுவலரிடம் பல முறை புகார் கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கல.

பாதி நாள் பள்ளிக்கே வராமல், வருகைப் பதிவில் கையெழுத்தும் போடாத தலைமை ஆசிரியர் அந்தோணிக்கு எப்படி சம்பளம் கொடுத்தாங்கன்னு தெரியல. இவர் இந்த அளவுக்கு மோசமாக மாற அதிகாரிகளும் ஒரு காரணம். கடைக்கோடி கிராமம் என்பதால் புகாரை கூட விசாரிக்க வருவதில்லை. அதன் விளைவு தான் இப்ப இப்படி இருக்கு. இப்ப சில நாட்களா ஆசிரியர் வரலன்னு புகார் போனதும் பள்ளிக்கு வந்த வட்டாரக்கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்கிறதா சொல்லிட்டு போய் இருக்காங்க. இதை முதல் புகார் கொடுத்தப்பவே செய்திருந்தால் எங்கள் குழந்தைகள் மதுவின் துர்நாற்றம் இல்லாமல் படிச்சிருப்பாங்க” என்றார்.
இந்த நிலையில் தலைமையாசிரியர் கடந்த சில நாட்களாக விடுப்பும் எடுக்காமல் பள்ளிக்கும் வராமல் உள்ளார். பள்ளிக்கு விசாரணைக்கு வந்த வட்டாரக் கல்வி அலுவலரிடமும் இதனை மாணவர்கள் கூறியுள்ளனர். விசாரணைக்கு பின் பேசிய வட்டாரக் கல்வி அலுவலர் ராமதிலகம், “ஏற்கனவே இவரை கண்டித்திருக்கிறேன். உதவி ஆசிரியர் இருந்ததால் இவர் பள்ளிக்கு வராமல் இருந்தார். உதவி ஆசிரியரை மாற்றுப்பணி போட்டு இவரை தொடர்ந்து வரச் சொல்லி இருந்தேன், இப்ப வரல. தொழில்வரி ரசீது தராததால பிப்ரவரி சம்பளத்தை நிறுத்தி வைத்திருந்தோம். இப்ப ரசீது கொடுத்துட்டார். சம்பளம் போடச் சொன்னேன். ஆனால், பிரச்சனை சி.ஈ.ஒ, டி.ஈ.ஓ வரை போனதால சம்பளம் நிறுத்தி இருக்கு. இந்தப் பள்ளிக்கு உபரியாக உள்ள சிவக்கொழுந்து என்ற ஆசிரியரை மாற்றுப்பணியில் நியமித்திருக்கிறோம்” என்றார்.

ஒரு போதை ஆசிரியரால் ஒரு பள்ளி சீரழிந்துள்ளதே என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடம் கேட்ட போது, “புகார்கள் வந்துள்ளது. சம்மந்தப்பட்ட ஆசிரியர் பணிக்கு வரவில்லை. அதனால் மாற்றுப்பணி ஆசிரியர் போட்டாச்சு. சம்மந்தப்பட்ட பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலர் விசாரணை செய்துள்ளார். விசாரணை அறிக்கையை இயக்குநருக்கு அனுப்பி ஆசிரியர் அந்தோணி மீது நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துள்ளோம்” என்றார்.
பள்ளியை மதுக்கூடமாக்கிய போதை ஆசிரியர் மீதும் மட்டுமின்றி இவர் மீது பல முறை பொதுமக்கள் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காத, பள்ளிக்கு வராத நாட்களுக்கும் சம்பளம் வழங்கிய வட்டாரக் கல்வி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.