
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வண்ணாரபாளையம் பகுதியில் வசிப்பவர். சரவணன். இவர் வீட்டில், கடலூர் மாநகராட்சி அலுவலர்கள் ஊழியர்களுடன் கடப்பாறையுடன் சென்று வரிவசூல் செய்ய சென்றுள்ளனர். வரி கட்டவில்லையென்றால் வீட்டின் படியை கடப்பாறை கொண்டு இடித்து விடுவதாகவும் கூறியுள்ளனர். இதனை வீட்டில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து, கடலூர் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘2024-25ம் காலத்திற்குரிய வரி மற்றும் வரியில்லா இனங்கள் வசூல் செய்ய அனைத்து வருவாய் உதவியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு குழுவாக சென்று நிலுவை வைத்துள்ள வரிவிதிப்புதாரர்களை நேரில் அணுகி கேட்கவும், பொதுமக்களுக்கு அடிப்படை விதிகள், பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு வருவாய் நிதிநிலையை எடுத்துக் கூறி நிலுவை வரியை வசூலிக்க முனைப்பான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.
மேற்படி, வரிவசூல் நிகழ்வில் பணியாளர்கள் மிகவும் கடுமையாக நெருக்கடி செய்கிறார்கள் என்ற புகாரினை தொடர்ந்து, தொடர்புடைய 2 அலுவலர்களை மார்ச் 22-ந்தேதி முதல் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது.