புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்துள்ளது பாலண்டாம்பட்டி கிராமம். இங்குள்ள தலித் கிறிஸ்தவர்களின் கல்லறைக்குச் செல்லும் பாதை தனியாருக்கு சொந்தமானதால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பட்டாதாரர்களால் அடைக்கப்பட்டது. கல்லறைக்குப் பொதுப்பாதை இருந்தும் சிலர் தலித் கிறிஸ்தவர்களை செல்ல அனுமதிக்கவில்லை. பொதுப்பாதையில் செல்ல அனுமதிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கொடுத்து வலியுறுத்தப்பட்டது. கடந்த அக்.31 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கீரனூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், கல்லறை திருநாளான வெள்ளிக்கிழமையன்று தலித் கிறிஸ்தவர்கள் தங்களது மூதாதையர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப் புறப்பட்டனர். நடுவழியில் அவர்களை மறித்த காவல்துறையினர் அஞ்சலி செலுத்த பொதுப்பாதையில் செல்லக்கூடாது என்றனர். பிறகு எப்படி நாங்கள் செல்வது எனக்கேட்டபோது வீட்டுக்குத் திரும்பிச் செல்லுமாறு கூறப்படுகிறது.
இதனால், அந்த இடத்திலேயே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அனுமதி மறுத்ததால் நடுரோட்டிலேயே மண் மேடு உருவாக்கி சிலுவைகளை வைத்து வழிபாடு நடத்தி தங்களது மூதாதயர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது காவல்துறையினர் கிறிஸ்தவர்களை மிக மோசமான வார்த்தைகளில் திட்டியதாகவும், பல்வேறு பிரிவுகளில் வழக்குப் போட்டு உள்ளே தள்ளிவிடுவதாக மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட தலித் கிறிஸ்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறும்போது, முழுக்க, முழுக்க சாதிவெறியர்களுக்கு ஆதரவாக தலித் கிறிஸ்தவர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையில் மாவட்டக் காவல்துறை செயல்பட்டு வருகிறது. இது அரசியல் சாசனத்தை மீறும் அப்பட்டமான நடவடிக்கையாகும். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும். தலித் கிறிஸ்தவர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென்றால் மாவட்ட அளவில் மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்தும் என்றார்.