Skip to main content

சிபிஐ சோதனையும் பட்டாசு உற்பத்தியாளர்கள் புலம்பலும்...

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

“பட்டாசுத் தொழிலுக்கு இது சோதனைக்காலம்..” என்றே சொல்லி வருகின்றனர், பட்டாசு உற்பத்தியாளர்கள். அவர்கள் கூறுவது போலவே, சிவகாசியிலுள்ள பட்டாசு ஆலைகளில் 15 பேர் கொண்ட சிபிஐ ஆய்வுக்குழுவினர், இன்று (12/03/2020) சோதனை நடத்தினர். 


உச்சநீதிமன்றத்தில் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்குத் தடைகோரிய வழக்கில், தடையில்லை என்று தீர்ப்பு வந்தாலும், பட்டாசு உற்பத்தி செய்வதில் சில நிபந்தனைகளை விதித்திருந்தது உச்ச நீதிமன்றம். குறைவாக மாசுபடுத்தும் மேம்பட்ட நவீன வகை பட்டாசுகளை, அதாவது பசுமைப் பட்டாசுகளை மட்டுமே இனிமேல் உற்பத்தி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. 

cbi team inspection with sivakasi plants

அதனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, பேரியம் நைட்ரேட் கலந்த பட்டாசுகளை உற்பத்தி செய்வதற்குத் தடை விதித்திருந்தது. உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை ஏற்று பட்டாசு ஆலைகள் செயல்பட்டாலும், சில உற்பத்தியாளர்கள் ‘நீங்க என்ன சொல்லுறது? நாங்க என்ன கேட்கிறது? பேரியம் நைட்ரேட் வேதிப்பொருள் இல்லாமல் தயாரிப்பதெல்லாம் பட்டாசு ஆகுமா?’ என்ற குமுறலில், வழக்கம் போலவே பட்டாசு உற்பத்தி செய்து வந்ததாக புகார் எழுந்தது. அதனால், சிவகாசி பட்டாசு ஆலைகளில் தடைசெய்யப்பட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்துகின்றனரா? என ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சிபிஐ- க்கு உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். 
 

அதன்படி, சிபிஐ குழுவினர் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் இன்று ஆய்வு மேற்கொண்டு, பட்டாசுகளையும், வேதிப்பொருள் கலவைகளையும் சீல் வைத்த அட்டைப் பெட்டிகளில் பேக் செய்து எடுத்துச் சென்றனர். “பா.ஜ.க. ஆட்சியில் எல்லா தொழில்களையும் போல பட்டாசுத் தொழிலும் நலிந்து வருவதற்குக் காரணம், அந்த மத்திய அமைச்சர்தான்..” என்று ஒரு பெண் அமைச்சரைக் கைகாட்டுகிறார்கள், பாதிக்கப்பட்ட சில பட்டாசு உற்பத்தியாளர்கள். “அந்த அமைச்சர் ‘அதிக அளவில் பட்டாசு உற்பத்தி செய்துவிட்டு குறைந்த அளவே கணக்கு காட்டிவருவது எனக்கு நன்றாகவே தெரியும். பட்டாசு உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் இந்தியா முழுவதும் அடித்துவரும் கொள்ளை லாபம் எத்தனை ஆயிரம் கோடி என்ற கணக்கும் என் பார்வைக்கு வந்தது. 


அரசாங்கத்தை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்து பல்லாயிரம் கோடிகளை கருப்பு பணமாக வைத்திருக்கின்றீர்கள். உங்களுக்கு ஏன் பா.ஜ.க. அரசு உதவ வேண்டும்? சீனாவிலிருந்து பட்டாசு இறக்குமதி செய்தால் அரசுக்கு வருவாய் அதிகம் கிடைக்குமே?‘ என்றெல்லாம் மிரட்டலாகப் பேசியிருக்கிறார். ஒருகட்டத்தில், மத்திய அமைச்சகத்தின் தூண்டுதலிலேயே, பட்டாசை தடை செய்யவேண்டுமென்று சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதுதான், பசுமைப் பட்டாசு வரைக்கும் கொண்டுவந்து எங்களை வதை செய்கிறது.” என்கிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்