"முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று 17.04.2020 தனது சொந்த ஊரான சேலம் சென்று மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் நடத்தி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். இது அரசின் ஊரடங்கு சட்டத்தையும், கோவிட் 19 நோய் தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் மீறிய செயல் அல்லவா?" என கேள்வி எழுப்பியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் மேலும் தனது அறிக்கையில்,

"கடந்த 15.04.2020 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த எதிர்கட்சிகள் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தி காவல்துறை சேலத்தில் கூடிய பெரிய கூட்டத்தை ஏன் தடுக்கவில்லை.?
முதலமைச்சர் என்பவர் அரசியல் அமைப்பு சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களுக்கும் மேலானவரா? அவர் என்ன தனது பராக்கிரம செயலால் படை நடத்தி வென்று, அதிகாரத்தில் உள்ள சர்வாதிகாரியா? அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் விசாலமான கலைஞர் அரங்கில் அரசியல் கட்சி தலைவர்கள் 11 பேர் கூடுவதால் கோவிட் 19 நோய் தொற்று பரவிவிடும் என பரபரப்பாக்கி தடை செய்து, காணொலி மாநாடு வழியாக கூட்டம் நடத்தச் சொன்ன ‘யோக்கியர்’கள் எங்கே போனார்கள்?

முந்தைய நாள் 16.04.2020 தலைமை செயலகத்தில் அமர்ந்து காணொலி மாநாடு வழியாக நீண்ட நேரம் மாவட்ட ஆட்சியர்களோடு கலந்தாலோசனை நடத்திய முதலமைச்சர் அடுத்த நாளில் சேலத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள அலுவர்களை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்த வேண்டிய அளவிற்கு என்ன தேசிய நெருக்கடி ஏற்பட்டது?
ஜனநாயக அரசியலமைப்பில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகளை ஒடுக்கி வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மாவட்ட ஆட்சியர்கள், மாண்புமிகு அமைச்சர்கள் நடத்தும் மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டங்களுக்கு, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படுவதில்லை என்பது முதலமைச்சருக்கு தெரிந்தே நடக்கும் உரிமை மீறல் செயலாகும். ஆளும் கட்சி என்ற தோரணையில், அரசின் ஆய்வுக் கூட்டங்களை அ.இ.அ.தி.மு.க. அரசியல் பரப்புரை மேடை ஆக்கி வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. வாயில் நுரை தள்ள ஊருக்கு உபதேசம் செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அவைகளை முதலில் அவரது செயலில், கடைப்பிடிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது." என கூறியுள்ளார்.