நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இந்த வழக்கு தொடர்பாக முதல் குற்றவாளியாக சேர்க்கப்ட்டடுள்ள சயான் கடந்த 1 ஆம் தேதி (01.02.2024) மதியம் கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தி இருந்தனர். இந்த விசாரணையின் போது அவர் 35 பக்கங்களுக்கு வாக்குமூலம் அளித்திருந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த சம்பவம் தொடர்பாக கேரளாவில் பூசாரியாக உள்ள மனோஜ் சாமி 9 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சயான் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக மனோஜ் சாமிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அளித்துள்ளனர். அதில் வரும் 15 ஆம் தேதி (15.02.2024) கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக ஆய்வு நடத்த குஜராத் தேசிய தடயவியல் ஆய்வகக் குழு தமிழகம் வருகை தந்திருந்தனர். அதன்படி இந்த குழுவினர் திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் இந்த வழக்கில் தொடர்புடைய 60 தொலைபேசி எண்கள், 19 டவர் இடங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.