விழுப்புரம் மாவட்ட எல்லையில், சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் உள்ள கோட்டக்குப்பம் பகுதியை அடுத்துள்ளது கீழ் புத்துப்பாட்டு. இந்த மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் புதுச்சேரி மீன்பிடித் துறைமுகப் பகுதிக்கு தினசரி அதிகாலை புறப்பட்டுச் சென்று அங்கு விற்கப்படும் மீன்களைக் கூடைகளில் வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
அப்படிப் பிழைக்கச் சென்ற பெண்களில் லட்சுமி(45), கோவிந்தம்மாள்(50), நாயகம்(46), பிரேமா(48), கமலம்(49), கங்கை அம்மாள்(59) ஆகிய 6 பெண்கள் நேற்று காலை புதுச்சேரி துறைமுகப் பகுதிக்கு மீன் வாங்குவதற்காகப் புறப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் கிழக்கு கடற்கரைச் சாலையில் செல்லும் ஷேர் ஆட்டோக்களில் மீன் வாங்குவதற்காகச் செல்வது வழக்கம். அதுபோல் நேற்று புதுச்சேரி செல்வதற்கு ஷேர் ஆட்டோ வருகைக்காக பஸ் நிலையம் அருகே காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி சென்ற கார் ஒன்று அதிவேகமாக வந்தது. அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையோரம் ஆட்டோவுக்காக காத்திருந்த பெண்கள் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
கார் மோதியதில் மீன் வாங்கச் செல்வதற்கு நின்றிருந்த பெண்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில், லட்சுமி கோவிந்தம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கங்கை அம்மாள், பிரேமா உட்பட மேலும் 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அந்த காரில் வந்த ஒரு இளம் பெண் உட்பட 4 வாலிபர்களும் காயமடைந்தனர். இந்த விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்தத் தகவல் அறிந்த கோட்டக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் ராபின்சன் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்த 9 பேரையும் மீட்டுப் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்களில் கங்கை அம்மாள், நாயகம் மற்றும் இரண்டு பெண்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் தொடர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன்(22), கோவிந்தன்(23), சேது(25), பிரசாந்த்(23) மற்றும் 22 வயது இளம்பெண் உட்பட அவர்கள் நண்பர்கள் ஒன்று சேர்ந்து சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றிப் பார்க்க வந்துள்ளனர். அப்போது இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது. காரை ஓட்டிய விக்னேஸ்வரன் தூக்கக் கலக்கத்தில் கார் ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.