ஜெர்மனி நாட்டில் உலகப் புகழ்பெற்ற ஜவுளி கண்காட்சி 2022ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற இருந்தது. இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் கலந்துகொண்டு புதிய ஆர்டர்களை எடுத்து வருவது வழக்கம். இது ஜவுளி கண்காட்சியில் இந்தியா சார்பில் 350க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட இருந்தது. இதில் ஹரியானா மாநிலத்தில் அடுத்தபடியாக கரூர் மாவட்டம் சார்பில் 45 அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
உலகம் முழுவதும் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக நோய் பரவல் அதிகரித்துவிடுமோ என்ற அச்சத்தில் நாட்டு மக்களை பாதுகாக்கும் வகையிலும் ஜெர்மனி அரசு இந்த கண்காட்சியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்தக் கண்காட்சியை நம்பியிருந்த கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் இந்த ஜவுளித் துறை சார்ந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜெர்மனியில் நடைபெறும் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு புதிய ஆர்டர்களை பெற்று வருவது வழக்கம். இதனால் அந்நிய செலாவணி அதிகரிக்கும். கடந்த ஆண்டும் கரோனா நோய் தொற்று காரணமாக கண்காட்சி நடைபெறாமல் போனது. இந்த ஆண்டும் ஒமிக்ரான் நோய் தொற்றால் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே இது அனைத்து வித தொழிலாளர்களுக்கும் வெகுவாக பாதிப்படையச் செய்துள்ளது. ஜவுளி ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.