கூட்டுறவு வங்கிகளில் அரசு ஊழியர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி சலுகை ரத்து செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
கூட்டுறவு சங்கங்களில், 5 பவுன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 31.3.2021ம் தேதி வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு இந்த சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அனைத்து வகையான கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் நடந்த தணிக்கையில் அரசாணைக்குப் புறம்பாக அரசு ஊழியர்கள், அவர்களுடைய குடும்பத்தினர், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் நகைக்கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், கூட்டுறவு தணிக்கை இயக்குநர் அறிக்கையில், கூட்டுறவு வங்கியில் பொது நகைக்கடன் தள்ளுபடியில் அரசு ஊழியர்கள், அவர்களுடைய குடும்பத்தினர், ஓய்வூதியதாரர்கள் ஆகிய 37984 கடன்தாரர்கள் தகுதியற்றவர்களாக கண்டறியப்பட்டு உள்ளது.
தகுதியற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த அசல் மற்றும் வட்டித் தொகையான 160 கோடி ரூபாய் மறுக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள தகுதியற்ற கடன்தாரர்களுக்கு தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பின், அவற்றை உடனடியாக ரத்து செய்து அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு பதிவாளர் தெரிவித்துள்ளார்.