திருச்சி மாவட்டம், மணிகண்டம் கள்ளிக்குடி புதிய மார்க்கெட்டில் கடை வாடகைக்கு எடுத்தவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள கள்ளிக்குடியில் ரூ.77 கோடி மதிப்பில் 10 ஏக்கரில் நவீன வசதிகளுடன் கூடிய 19 வரிசை கட்டிடங்கள் உள்ளன. இது 1,000 கடைகள் அடங்கிய காய்கறி, பழங்கள், மலர்களுக்கான மத்திய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில், 830 கடைகள் காலியாகவே இருந்து வந்தன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 207 கடைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. எஞ்சிய 623 கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில், தற்போது கள்ளிக்குடி மார்க்கெட்டை முறையாக நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தப் பத்திரம் கொடுக்க வேண்டும். நடப்பாண்டு உரிய ஒப்பந்தப் பத்திரம் புதுப்பித்துத் தரவேண்டும். மார்க்கெட் செயல்பாட்டிற்கு வரும் வரை பராமரிப்பு செலவுக்காகத் தொகையாக ரூ.250 மட்டும் குறைந்த பட்ச வாடகையாக நிர்ணயிக்கப்பட வேண்டும்.
கண்காணிப்பாளரின் அத்துமீறல் காரணமாகப் பல கடைகளை உள் வாடகைக்கு விடப்படும் செயல்பாடு உள்ளது. துறை ரீதியாக நடவடிக்கை எடுத்துச் சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியரிடம் சுமார் 70க்கும் மேற்பட்ட கடை எடுத்த வியாபாரிகள் மனு அளித்தனர்.