திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே நடகோட்டை கிராமத்தில் தனியார் சோலார் நிறுவனம் அரசு நிலங்களை ஆக்கிரமித்து மின் நிலையம் அமைப்பதை கண்டித்தும், நிலங்களை மீட்டுத் தர வலியுறுத்தியும் அந்த கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் வருகின்றனர். இந்நிலையில் நடகோட்டை கிராமத்க்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்குள்ள பொதுமக்களை சந்தித்து சோலார் நிறுவனம் செய்த ஆக்கிரமிப்பு குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அவர்களிடம் பேசிய சீமான், ''அரசு நிலம் மீட்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சி தனியாக வழக்குத் தொடர்ந்துள்ளது. உங்களுக்காக போராட தயாராக உள்ளேன்'' என்றார். அப்போது கூட்டத்தில் பேசிய மூதாட்டி ஒருவர் 'போராட்டம் செய்தால் உன்னைக் கொலை செய்யக் கூட தயங்க மாட்டார்கள்' என்று பதறினார். அப்பொழுது சீமான் விக்ரம் சினிமா பாணியில் 'பாத்துக்கலாம்... பாத்துக்கலாம்...'' என்று சொல்லிவிட்டு பலமாக சிரித்தார்.
கூட்டத்திற்குள் நுழைந்து வந்த ஒரு முதியவர் 'தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் பேரைச் சொல்லித்தான் இந்த சோலார் ஆக்கிரமிப்புகள் நடைபெறுகிறது' என்று பெரிய குண்டை தூக்கி போட்டார். 'எதற்கும் பயப்படாதீர்கள் நான் இருக்கிறேன்' என்று சொல்லிவிட்டு கிளம்பிய சீமானிடம் அந்த முதியவரின் கேள்வியை செய்தியாளர்கள் கேட்டபோது, 'இருக்கலாம்... இருக்கலாம்...' என்றவர் ''தமிழக முதல்வர் பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்று சொல்லி வருகிறார். ஆனால் இங்கு அப்படி எதுவும் நடைபெறவில்லை. ஆக்கிரமித்தவர்களுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகளும், காவல்துறையும் துணை நிற்கிறது. நாம் தமிழர் கட்சி போராட்டங்கள் மூலம் நிலங்களை மீட்டெடுக்கும்'' என்று கூறினார்.