ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே வசித்து வரும் சீனிவாசனின் மகள் சபீனா(20). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், சபீனாவிற்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. நெமிலி அருகே வசிக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் சபீனாவிற்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டு இருவருக்கும் கடந்த 29 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை எனது தோழிகளுக்கு பிடிக்கவில்லை; அதனால் எனக்கும் பிடிக்கவில்லை என்று கூறி வீட்டி இருந்து வெளியேறி பாதுகாப்பு கேட்டு அரக்கோணம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் சபீனாவை காப்பகத்தில் சேர்ந்தனர். இதையடுத்து பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் சபீனாவை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், காப்பகத்தில் இருந்து வீட்டிற்கு சென்ற சபீனா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சபீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.