Skip to main content

நகைக்கடன் தள்ளுபடி செய்ய லஞ்சம்? போஸ்டரால் பரபரப்பு!

Published on 30/03/2022 | Edited on 30/03/2022

 

 Bribes to discount jewelry? Excitement by the poster!

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள சின்னப்பண்டாரங்குப்பத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இங்கு சின்னபண்டாரங்குப்பம், செம்பளக்குறிச்சி, பெரியவடவாடி, விஜயமாநகரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த கூட்டுறவு வேளாண் சங்கம் மூலம் மானிய விலையில் உரம், யூரியா, பூச்சி மருந்து மற்றும் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள் மற்றும் விவசாயிகளுக்கான பயிர்க்கடன், கரும்பு கடன், விவசாய உபகரணங்கள் மற்றும் விவசாய நகைக்கடன் ஆகியவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க அறிவித்த தேர்தல் வாக்குறுதி அறிவிப்பின்படி, தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்த விவசாயிகளின் நகைக்கடன் 5 பவுன் வரை தள்ளுபடி செய்யப்படும் என உத்தரவிட்டார். அதன்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகை அடகு வைத்த பயனாளிகளுக்குத் திரும்ப நகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

 

இப்பணிகளில் பங்கேற்றுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஆகியோர் பயனாளிகளிடம் நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கு 1,000 ரூபாய் லஞ்சம், பயிர்க் கடன் தள்ளுபடிக்கு 3 ஆயிரம்  ரூபாய் லஞ்சம், பயிர் கடன் தள்ளுபடிக்கு மூட்டைக்கு 100 ரூபாய் லஞ்சம் என வசூலித்து வருவதாக கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சின்னபண்டாரங்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் மீது அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்திற்குப் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக்கோரி போஸ்டர் மூலம் தங்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விருத்தாசலம், மங்கலம்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் 'நகைக்கடன் தள்ளுபடி செய்ய லஞ்சம். தமிழக முதல்வர் அறிவித்த நகைக்கடனை தள்ளுபடி செய்ய 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு தள்ளுபடி செய்து வருகிறார்கள். அதேபோல் பயிர் கடனுக்கு 3,000 ரூபாய், உரம் வழங்க மூட்டைக்கு 100 ரூபாய் என லஞ்சம் வசூலித்து வருகிறார்கள். தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 3 வருடத்திற்கு முன்பு மாடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு, கடந்த 2 வருடத்திற்கு முன்பு வட்டி செலுத்தாத நகைக்கடன்களுக்கு நகைகளை ஏலம் விடுவதில் முறைகேடுகள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது விருத்தாசலம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்