இசையமைப்பாளர் இளையராஜாவின் ரெக்கார்டிங் ஸ்டூடியோ சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. பிரசாத் ஸ்டூடியோவிற்கு சொந்தமான அந்த ஸ்டூடியோவிற்கு வாடகைகொடுத்து வந்தார் இளையராஜா. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அந்த ஸ்டூடியோவில்தான் தனது இசைப்பணிகளை மேற்கொண்டு வருகிறார் இளையராஜா.
இந்நிலையில், அந்த ஸ்டூடியோவை காலி செய்யச்சொல்லி பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் சொல்லியது. இதனால் இளையராஜா மனவருத்தத்தில் இருந்தார். இளையராவுக்கு அதே ஸ்டூடியோவை வழங்கச்சொல்லி இயக்குநர் பாராதிராஜா தலைமையில் கடந்த 28ம் தேதி திரையுலகினர் பிரசாத் ஸ்டூயோ முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது நிர்வாகத்தினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.
இதையடுத்து, அந்த ஸ்டூடியோவிலேயே தான் தொடர்ந்து செயல்பட அனுமதிக்குமாறு பிரசாத் ஸ்டூடியோவிற்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைத்து உத்தரவிட்டார்.
சமரச மையத்தில் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோவிற்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையில் இந்த பிரச்சனைக்கான முற்றுப்புள்ளி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.