மனித வாழ்வு இயந்திர தன்மையோடு சுற்றிக் கொண்டுள்ளது. இதில் பிரதானமாக நோய் என்கிற அரக்கன் ஊடுருவி வாழ்வை சிதைக்கும் கொடூரம் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு சமீப காலமாக பல்வேறு வகையான நோய் நொடிகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.பிரதானமானது மார்பக புற்றுநோய்.
இந்த மார்பக புற்றுநோய் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் சொற்பமான வகையில் இருந்தது. ஆனால் இப்போது அதிக எண்ணிக்கையில் கூடியுள்ளது. இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் இந்திய பெண்கள் 100 பேரில் 20 பேருக்கு மார்பக பிரச்சனையும், அதனால் ஏற்படும் கட்டிகளில் 10 சதவீதம் பேர் புற்று நோய்க்கு உள்ளதாகவும் வெளிவந்துள்ளது.
இந்த புற்றுநோய் ஏன் இப்போது வளர்ந்து வருகிறது என்பதை மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் ஈரோடு மாவட்ட கண்காணிப்புக்குழு அலுவலரும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை முதன்மை செயலாளருமான பாலச்சந்திரன் ஐஏஎஸ் தலைமையில் ஒரு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த முகாமிற்கு பெயர் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறிதல் என்பது தான்.
குறிப்பாக அரசு ஊழியர்கள் இந்த புற்றுநோயில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது. இது அடுத்த மூன்று நாட்கள் வரை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பாலச்சந்திரன் ஐஏஎஸ், "இப்போதெல்லாம் பெரும்பாலும் பெண்கள் வேலைக்கு போகிறார்கள். இதில் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறையில் அதிக அளவில் பெண்கள் பணிபுரிகிறார்கள். தொடர்ந்து பணிச்சுமை காரணமாக அவர்கள் வேலைப்பளுவில் ஈடுபட்டு வருவது தெரிகிறது.
பெண்கள் இந்த காலத்தில் தங்களுக்கு வருகிற நோய் நொடிகளை கூர்ந்து பார்ப்பது அவசியம். குறிப்பாக மார்பகப் புற்றுநோய் என்பது இது பரம்பரை நோய் அல்ல. ஆனாலும் பல்வேறு காரணங்களால் இந்த நோய் வர வாய்ப்புள்ளது. இதற்கு கூச்சமில்லாமல் அவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும். அடுத்து மேமோகிராபி என்கிற பரிசோதனையும் செய்ய வேண்டும்.
குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள் குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு இந்த மார்பக புற்றுநோய் அதிகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆகவே கண்டிப்பாக பணிபுரியும் பெண்கள் இந்த நோயிலிருந்து இருந்து மீளுவதற்கு பரிசோதனை மிக முக்கியம். ஆகவேதான் இன்றிலிருந்து மூன்று நாட்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் அவர்களின் பெண்களுக்கு மட்டுமே இந்த பரிசோதனை முகாம் நடத்துகிறோம். இது தொடர்ச்சியாக மாநிலம் முழுக்க நடத்தப்படும் " என்றார்.
பின்னர் குடும்ப நல மருத்துவர் சுமதி நம்மிடம் கூறும்போது "மார்பகப் புற்றுநோய் என்பது இப்போது மிகவும் கூடுதல் ஆகி விட்டது. அதற்கு காரணம் உணவு வகைகள் தான். அந்த உணவிலிருந்து தான் ஏற்படுகிற விளைவுகள் கிருமிகள் உருவாகி அது தங்குமிடமாக பல்வேறு நிலைகளில் இருக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் திருமணமான பெண்கள் குழந்தைப்பேறு உள்ளவர்கள் குழந்தை பெற்றவுடன் மூன்று நான்கு மாதங்களில் தாய்ப்பால் நிறுத்துவது. இப்போது பேஷன் ஆகிப் போய்விட்டது.
அதற்கு காரணம் தாய்ப்பால் தொடர்ந்து கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என அவர்கள் நம்புகிறார்கள். அது உண்மையில்லை. ஒவ்வொரு தாய்மார்களும் தங்களது குழந்தைகளுக்கு தற்போதைய நிலையில் கூறுவதென்றால் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தாய்ப்பால் கொடுப்பது அவசியம். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பெரும்பாலும் மார்பக புற்றுநோய் வராது" என்றார். நவீன விஞ்ஞான யுகத்தில் கிருமிகளும் நோய்களும் வெவ்வேறு வகையான ஊடுருவலை நடத்திக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த மார்பகப் புற்றுநோய் என்பது அதிகரிப்பதும் அதை தடுக்க வேண்டிய பயன் முறைகளையும் மருத்துவர்கள் கூறுவதும் நடந்து வருகிறது.