திருச்சி கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான பத்தாம் வகுப்பு மாணவனை தீயணைப்பு படையினர் தேடிவந்த நிலையில் இன்று சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
திருச்சி கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகில் சுமார் 6 அடி உயரத் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்தப் பகுதியில் குளிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வந்த சாம்ரோசன் என்ற மாணவன் நண்பர்களுடன் நேற்று மதியம் தடுப்பணையில் நிரம்பியுள்ள நீரில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென சிறுவன் சாம்ரோசன் காணாமல்போன நிலையில் பதற்றமடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த மீட்புப் படையினர் தொடர்ந்து சிறுவனைத் தேடி வந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்றிலிருந்து மீட்புப் படையினர் தேடிவந்த நிலையில் சிறுவனின் உடல் மீட்கப்படாத நிலை இருந்தது. இரண்டாவது நாளாக இன்றும் தேடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஸ்கூபா டைவிங் வீரர்களும் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இரண்டு நாள் தேடுதலுக்கு பின் சிறுவன் சாம் ரோசன் உடல் மீட்கப்பட்டுள்ளது. இது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.