கொதிக்கும் சாம்பாரில் தவறுதலாக விழுந்த சிறுவன் தழும்பு நீக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் மதன்(3). செல்வம் வீட்டுக்கு அருகிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி கடையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மதன், ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் தவறுதலாக விழுந்துள்ளார். அலறித்துடித்த மதனின் குரலைக் கேட்ட கடை ஊழியர்கள் உடனடியாக மதனை காப்பாற்றினர். இதில் சிறுவனின் வலது கை வெந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.
தொடர்ந்து மதனின் கை பகுதியிலிருந்த தீக்காய தழும்புகளை சரி செய்ய வேண்டும் என பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். தீக்காய தழும்பு நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதை ஒப்புக் கொண்ட பெற்றோர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென சிகிச்சையின்போது சிறுவன் மதன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோர் தரப்பில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்காததால் மகன் இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அங்கு சென்ற போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பிழைத்த சிறுவன் அதனால் ஏற்பட்ட தீக்காய தழும்புகளை சரி செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.