சிவகாசியைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி - வத்சலா தம்பதியினர். இவர்களுக்கு சுரேஷ் என்ற 7 வயது மகன் ஒருவர் இருந்தார். சுரேஷ் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அவரது பெற்றோர் பல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் சுரேஷ் உயிரிழந்துள்ளார். மகன் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் கடும் மன வேதனையில் பழனிசாமியும், வத்சலாவும் இருந்து வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பழனிசாமியின் சகோதரர் முருகேசன் இருவரையும் சிவகாசியில் இருந்து கோவைக்கு அழைத்து வந்துள்ளார். பின்பு பழனிசாமி வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். இருப்பினும் இருவரும் மகன் இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி காந்திபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து பழனிசாமியும், வத்சலாவும் தங்கியுள்ளனர். ஆனால், நீண்ட நேரமாகியும் அந்த அறை திறக்கப்படாததால், விடுதி ஊழியர்கள் கதவை தட்டிப்பார்த்துள்ளனர். ஆனால், கதவு உள்பக்கம் பூட்டியிருந்ததால், சந்தேகமடைந்த ஊழியர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவைத் திறந்துகொண்டு அறைக்குள் சென்று பார்த்தபோது, பழனிசாமி - வத்சலா இருவரும் விஷ அருந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இரு உடல்களை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அறையைச் சோதனையிட்டனர்.
அப்போது இருவரும் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில், “எங்களது மகன் சுரேஷ் இல்லாத வாழ்க்கையை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 7 வருடம் நாங்கள் அவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டோம். இப்போது அவன் இல்லாததால், ஒவ்வொரு நிமிடத்தையும் கடக்க ஒவ்வொரு வருடம் போல ஆகிறது. அவனால் எங்களை பார்க்காமல் இருக்க முடியாது. எனவே அவன் இருக்கும் இடத்துக்கே நாங்கள் சென்று விடுகிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.