தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் தேர்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையடைந்து தேர்வுக்காக பள்ளிக் கல்வித்துறை தயார் நிலையில் இருக்கிறது.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 13 ஆம் தேதி) தொடங்குகிறது. அதேபோல் நாளை (மார்ச் 14 ஆம் தேதி) பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2022 - 2023 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு தேர்வினை 8.5 லட்சம் மாணவர்களும், அதே போல 11 ஆம் வகுப்பு தேர்வினை 7.8 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளனர். 3,225 மையங்களில் இந்த பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் இந்த தேர்வுப்பணிகளிலும் விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் மாணவர்களுக்கான பதிவெண்கள் தேர்வறைகளில் எழுதும் பணியும் முடிவடைந்து, இன்று காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு துவங்கியது.
முன்னதாக இன்று காலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் உள்ள இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில், தேர்வுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அதேபோல், அங்கிருந்த 12ம் வகுப்பு மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு முழுவதும் இன்று 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதையொட்டி திருச்சியில் நான் பயின்ற இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடைபெறவுள்ள வகுப்பறைகளையும், அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்து மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தோம். மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் தேர்வு எழுதுங்கள்! மாணவர்களுக்கு எனது அன்பு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.