தொடர்ந்து தமிழக ஆளுநர் சர்ச்சையான பேச்சுகளில் சிக்கி வரும் நிலையில் சீர்காழி சென்றுள்ள அவருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே திருக்குறள் மொழிபெயர்ப்பு, சனாதனம் குறித்த ஆளுநரின் பல்வேறு பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில், சீர்காழி சட்டநாதர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேகத்திற்கு தருமபுரம் ஆதீனம் சார்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைக்கப்பட்டிருந்தார். இன்று மாலையில் கோவிலில் நடைபெறும் யாக சாலை பூஜைகளில் ஆளுநர் கலந்து கொள்ள இருந்தார். அதற்காக சாலை மார்க்கமாக தமிழக ஆளுநர் சீர்காழி வந்திருந்தார்.
அப்பொழுது இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அறிவழகன், மாவட்ட துணைச் செயலாளர் குமரேசன் தலைமையில் மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் விஜய் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் ஆளுநரின் காருக்கு முன்பு கருப்புக் கொடி காட்டி அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஐந்து பேரையும் கைது செய்ததோடு அவர்கள் வந்திருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.