ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணனின் இறுதி மரியாதை நிகழ்வு கடந்த 13ம் தேதி மதுரையில் அவரது சொந்த ஊரான டி.புதுப்பட்டியில் நடைபெற்றது. முன்னதாக விமான நிலையம் வந்த அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இறுதி அஞ்சலி செலுத்தி இருந்தார். இந்த நிகழ்விற்கு பிறகு வெளியே வந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜகவினர் காலணி வீசியது பதற்றத்தை ஏற்படுத்தியது.
அரசு மரியாதை செய்த பிறகுதான் பாஜக மற்றும் பிறகட்சி தொண்டர்கள் மரியாதை செய்ய முடியும் எனக் கூறியதால் இந்த மோதல் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அப்போது மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணன் அக்கட்சியில் இருந்து விலகி நள்ளிரவில் அமைச்சரைப் பார்த்து நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய சரவணனை கைது செய்ய வேண்டும் என்று கூறி மதுரை மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரன் தலைமையில் பாஜகவினர் 50-க்கும் மேற்பட்டோர் மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்துள்ளனர்.