பிரபல தனியார் தமிழ்த் தொலைக்காட்சியில் நடிகரும், ம.நீ.ம. தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசனிற்கு வந்துள்ளது. இந்நிகழ்ச்சி துவங்கியதிலிருந்தே பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனங்கள் வலுத்துவந்தது. இருந்தபோதிலும் அந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் குறித்து கண்டனம் தெரிவித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனர் ராஜேஸ்வரி பிரியா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர், “எத்தனையோ குடும்பங்களைச் சீரழித்து வரும் ஆன்-லைன் ரம்மி விளையாட்டு அரசால் தடுத்து நிறுத்த படவேண்டிய ஒன்றாகும்.எத்தனையோ இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை இழந்து வருகின்றனர். இளைஞர்களது நேரத்தை வீணடிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை வழங்குவோரில்(sponsor) ஆன்லைன் ரம்மி இருப்பது மிக ஆபத்தான ஒன்றாகும். இப்படிப்பட்ட நிகழ்ச்சியினை ஒரு கட்சியின் தலைவர் தொகுத்து வழங்குவது மிகவும் வேடிக்கையாக உள்ளது.சிறிது கூட சமூக அக்கறை இல்லாத செயல் ஆகும். இரண்டு வேடங்களில் சினிமாவில் நடிப்பது போல் நிஜத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். தொடர்ச்சியாகச் சமுதாயத்தைச் சீரழிக்கும் முயற்சியில் ஈடுபடுவோரை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். பிக்பாஸ் நிகழ்ச்சியினை மக்கள் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.