Skip to main content

குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை

Published on 17/12/2023 | Edited on 17/12/2023
Bathing in Kurdalam waterfalls is prohibited

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கும், மிக கனமழைக்கும் வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தற்போது கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது.

அதே சமயம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாகத் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிகளில் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து குற்றால அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை நாளையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்களும் குற்றாலம் அருவிகளில் குளிக்க வந்திருந்தனர். ஆனால், அரசின் இந்தத் தடை உத்தரவை அறிந்து சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் ஏமாற்றமடைந்தனர். 

சார்ந்த செய்திகள்