Skip to main content

பாபநாசத்தில் பாவத் துணிகளை எடுத்து உடுத்தும் மக்கள்!

Published on 21/01/2020 | Edited on 21/01/2020

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம் என்பது பாவங்களைக் அழிக்கக்கூடிய புனித நகராக விளங்கிவருகிறது. இப்படிப்பட்ட பாபநாசத்திற்கு தமிழகத்திலுள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், விழுப்புரம், சென்னை உள்பட பல நகரங்களிலிருந்தும், பட்டி தொட்டிகளில் இருந்தும் தினசரி ஐநூறுக்கு மேற்பட்ட மக்கள் வந்து சடங்கு, சம்பிரதாயங்களை செய்துவிட்டுப் போகிறார்கள்.

 

People who dress in sinful clothes


இதற்காக அங்குள்ள அய்யர்கள் மூலமாக தோஷங்கள் நீங்குவதற்காகவும், முன்னோர்களின் பாவம் போக்கவும், அதுபோல் தாய் தந்தைக்கு திதி கொடுப்பதும், தடைகள் போக்குவதற்கும், திருமணத் தடைகள் நீக்குவதற்கும், முன்னோர்களை எண்ணி எள்ளு தண்ணி  இறைப்பது,  இப்படி சில சடங்கு சம்பிரதாயங்களை செய்கிறார்கள். இந்த சடங்கு சம்பிரதாயங்கள் செய்யும் பொதுமக்கள் தங்கள் கட்டியிருக்கும் வேஷ்டி, சேலை, பேண்ட், சுடிதர் போன்ற துணிகளை அந்த பரிகார பூஜை முடிந்தவுடன் அருகே ஓடும் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு அப்படியே ஆற்றிலே விட்டுவிட்டு மாற்று துணி கட்டிக் கொள்கிறார்கள்.

இதனால் தாமிரபரணி ஆறும் மாசுபட்டு போகிறது.  தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை தான் திருநெல்வேலியில் உள்ள பெரும்பாலான மக்களுக்கும் குடித்து வருகிறார்கள். அதோடு விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் பாபநாசத்துக்கு வரும் மக்கள் ஆற்றில் குளிக்கும் போது தங்கள் கட்டியிருக்கும் துணிமணிகளை ஆற்றில் விடக் கூடாது என்றும், அந்த துணிகளை அருகே உள்ள தொட்டியில் போட வேண்டுமென மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில்தான் பாபநாசத்தில் உள்ள போலீஸாரும் அங்கு வரும் மக்களிடம் தங்கள் உடுத்தியிருக்கும்  துணிகளை ஆற்றில் விடக்கூடாது அருகில் உள்ள தொட்டியில் போட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் பாபநாசத்துக்கு வரும் பெரும்பாலான மக்கள் தங்கள் பரிகார பூஜைகளை செய்து விட்டு அப்படியே தாமிரபரணி ஆற்றில் இறங்கி  நீராடிவிட்டு அந்த துணிகளையும் ஆற்றிலையே  விட்டுவிடுகிறார்கள். பலர்   தொட்டிகளிலும், பாறை  திட்டுகளிலும்  போட்டுவிட்டு  போய்  விடுகிறார்கள்.  அதன்பின் அருகே உள்ள சிவபெருமானை வணங்கி விட்டு சொந்த ஊர்களுக்கு சென்று விடுகிறார்கள்.

 

People who dress in sinful clothes


இப்படி பாவ காரியங்களை கழிக்க வரும் மக்கள் ஆற்றில் விடும் துணிகளையும், தொட்டியில் போடும் துணிகளையும் அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் எடுத்து உடுத்துவதும், சிலர் அந்தத் துணிகளை பைகளில் எடுத்து சென்று பழைய துணி வியாபாரிகளிடம் போட்டு பணம் பார்ப்பதுமாக இருந்து வருகிறார்கள்.

பரிகார பூஜைகளில் கலந்துகொண்டு விட்டு  அந்தத் துணிகளை தாமிரபரணி ஆற்றிலும், அதன் அருகே இருக்கும் தொட்டி மற்றும் பாறை மேல் போடுவதை யாரும் எடுக்கக்கூடாது என்று நகராட்சி மூலம் வலியுறுத்தப்பட்டும் வருகிறது. அதோடு நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் அந்த துணிகளை எடுத்து மூட்டை மூட்டையாக கட்டி வைத்து பத்து நாட்களுக்கு ஒரு முறை அந்தத் துணிகளை எடுத்துச்சென்று உரக் கிடங்குகளில் போட்டு விடுகிறார்கள். அந்த அளவுக்கு துப்புரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள் .அதையும் மீறித்தான்  அப்பகுதியில் இருக்கக் கூடிய சில மக்களும், சுற்று வட்டாரங்களில்  இருக்க கூடிய பலரும் அந்த துணி மணிகளை எடுத்து கொண்டு போய்  உடுத்தியும், விற்பனை செய்தும் வருகிறார்கள்.

இதை  போலீசார்தான் தடுக்க வேண்டும் என பாவ தோஷங்களை நீக்க வரும் மக்களே வலியுறுத்தி வருகிறார்கள். 

 


 

சார்ந்த செய்திகள்