கர்நாடகா மாநிலம், தெற்கு பெங்களுரூ ஈஜீபுரா என்கிற பகுதியில் கோதண்டராமசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் கோதண்டராமசாமி தேவஸ்தானம் என்கிற தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமானது.
இந்த கோயில் சார்பில் ஈஜிபுராவில் பிரம்மாண்டமான பெருமாள் சிலை அமைக்க முடிவு செய்தனர். 11 முகங்கள், 22 கைகள் கொண்ட 64 அடி உயரம் கோதண்டராம சுவாமி, 44 அடி உயரம் கொண்ட 7 தலை கொண்ட ஆதிசேஷன் சிலை என இரண்டு சிலைகள் தனித்தனியாக செதுக்கி 108 உயரத்தில் அமைப்பது என முடிவு செய்தனர்.
இவ்வளவு பெரிய சிலை செய்ய கற்கள் எங்குள்ளது என கூகுள் நிறுவனத்தினருடன் சேர்ந்து சேட்டிலைட் வழியாக தேடியபோது, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள நீள வாக்கிலான குன்றில் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து இதுப்பற்றி தமிழகரசு மூலம் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று கற்களை லேசர் மூலமாக கட் செய்து தனியாக எடுத்து சிலைகளை உருவாக்கினர்.
சிலைகள் உருவாக்கும் பணிகள் இரண்டு ஆண்டுக்கு முன்பு முடிந்தது. அந்த சிலைகளை தற்போது அந்த இடத்தில் இருந்து பெங்களுரூவுக்கு கொண்டு செல்ல வேண்டும். தேகூரில் இருந்து தெள்ளார், தெள்ளாரில் இருந்து திண்டிவனம் பைபாஸ், திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களுரூ செல்ல வேண்டும்.
இதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த தனியார் அறக்கட்டளை முயற்சி செய்தது. இதற்காக கார்கோ கண்டெய்னர் ( 160 டயர்கள் பொருத்தப்பட்டது ) வண்டியில் ஒருச்சிலையை ஏற்றினர். மற்றொரு சிலையில் அதைவிட சிறிய கார்கோ கண்டெய்னரில் ஏற்றினர். இதற்காக பெரிய கிரேன்கள், நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றினர். பெரும் முயற்சிக்கு பின் சிலைகள் கார்கோவில் ஏற்றப்பட்டது. ஏற்றப்பட்ட இடத்தில் இருந்து 50 மீட்டர் கூட அந்த கார்கோ கண்டெய்னரால் போக முடியவில்லை. இதனால் கொண்டு செல்லும் பணி தடைபட்டது.
இந்நிலையில் ஓராண்டுக்கு பின் 2018 டிசம்பர் 6ந்தேதி, ஒரளவு எடை குறைக்கப்பட்ட அந்த சிலைகள், 240 டயர்கள் பொருத்தப்பட்ட கார்கோ கண்டெய்னரில் ஏற்றப்பட்டது. முதல் சிலை 350 டன்னும், இரண்டாவது சிலை 200 டன்னும் அளவு கொண்டது. ஏற்றப்பட்ட அந்த சிலைகள் 100 மீட்டர் தூரத்துக்கே வந்தது. இதற்கே 5 நாட்களானது. அந்த வாகனத்தின் டயர்கள் பாரம் தாங்காமல் வெடிக்கின்றன. இதுவரை 6 டயர்கள் வெடித்ததாக கூறுகின்றனர். அதை சரி செய்துக்கொண்டு 5வது நாளாக பயணம் செய்ய முயல்கிறது அந்த கார்கோ கண்டெய்னர். ஆனால் அதனால் முடியவில்லை.
இந்நிலையில் அந்த சிலைகளை கடந்த டிசம்பர் 7ந்தேதி மாலை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். பின்னர் இந்த கண்டெய்னர்க்கு முன்னும், பின்னும் பைலட் வாகனம் செல்ல அறிவுறுத்தினார். இந்த சிலை கோயிலுக்கு சரியாக போய் சேரவேண்டுமென பெருமாள் பக்தர்கள் பஜனை செய்வதோடு, கடவுளை பிரார்த்திக்கின்றனர்.