புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தென்னை மரத்துக்கும் தலா ரூ. 20 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். ஏக்கர் கணக்கு என்பதை தவிர்க்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கீரமங்கலத்தில் பேட்டி அளித்தார்.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அரசியல் கட்சி தலைவர்கள் பார்வையிட்டு வருகின்றனர். அதே போல புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், பனங்குளம் பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டு விவசாயிகளிடம் சேதம் குறித்து கேட்டறிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும் போது..
புயல் வரப் போகிறது என்று பல நாட்களாக சொல்லிக் கொண்டிருந்த தமிழக அரசு புயல் பாதிக்கப்பட்ட பிறகு அதற்கு ஏற்ப நிவாரணப் பணிகளையும் மீட்புப் பணிகளை செய்ய தவறிவிட்டது. அதாவது ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு குடியிருக்க வழியின்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. பல கிராமங்களுக்குள் போகமுடியாத நிலை உள்ளது.
அதே போல தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் என்பது போதுமானது இல்லை. ஒரு தென்னை மரத்தை வளர்க்க 5 முதல் 10 ஆண்டுகள் ஆகிறது. அப்படியான மரங்களுக்கு சிறு தானிய பயிர்களுக்கு வழங்குவது போல ஏக்கர் கணக்கில் நிவாரணம் வழங்குவது முறையற்றது. அதனால் ஒரு தென்னை மரத்துக்கு ரூ. 20 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கினால் தான் விவசாயிகள் மீழமுடியும். அதே போல தேக்கு, மா, பலா, போன்ற மரங்களுக்கும் ஒவ்வொரு மரத்துக்கும் தனித்தனியாக நிவாரணம் வழங்க வேண்டும். மற்ற நெல் போன்ற தாணியங்களுக்கு ஏக்கர் கணக்கில் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் துரிதமாக செயல்பட்டு மீட்புப் பணிகளை செய்வதுடன் அனைவருக்கும் குடிதண்ணீர் வழங்க வேண்டும். முன் எச்சரிக்கை அறிவித்ததுடன் அப்போதே அனைத்து பகுதிகளுக்கு டேங்கர் மற்றும் ஜெனரேட்டர் வசதிகளை செய்து கொடுத்திருந்தால் குடிதண்ணீர் பிரச்சனை இல்லாமல் இருந்திருக்கும் என்றார்.