
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் செல்வாக்கு பெற்றிருந்த அதிமுக, ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு வேகமாக தேய்ந்து வருகிறது. அக்கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், இதர நிர்வாகிகள் ஆளுங்கட்சியில் ஐக்கியமாகி வருகின்றனர்.
அண்மையில், ஒன்றியக்குழுத் தலைவர் பதவியையும் அதிமுக இழந்துள்ளது. மீண்டும் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தை திமுக கைப்பற்றியுள்ளது. அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.நாட்டாமங்கலம் ஊராட்சி மன்றத் துணைத்தலைவராக இருப்பவர் பரமேஸ்வரன். அதிமுக பிரமுகரான இவருடைய தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக பொறுப்பாளரும், ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான விஜயகுமார் முன்னிலையில் மார்ச் 27ம் தேதி திமுகவில் இணைந்தனர்.
பேரூராட்சித் தலைவர் பாபு என்கிற செல்வராஜ், துணைத் தலைவர் செல்வசூர்யா, ஒன்றியக்குழு உறுப்பினர் பரமேஸ்வரன், பேரூராட்சி உறுப்பினர்கள் திருமுருகன் தேவன், தீனதயாளன், மணியம்மாள், மணியம்மாள் குமார், கிளை நிர்வாகிகள் துரை, அறிவழகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதேபோல் மார்ச் 14ம் தேதியன்றும், ஒன்றியக்குழு உறுப்பினர் பரமேஸ் முன்னிலையில் அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் 100 பேர் திமுக ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.