ஒவ்வொரு வருடமும் சென்னைப் புத்தகக்காட்சி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் இந்தாண்டு சென்னைப் புத்தகக்காட்சி டிசம்பர் 27-ஆம் தேதி தொடங்குகிறது. அதன் முன்னோட்டமாக வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இன்று டிசம்பர் 21 காலை 7 மணிக்குச் சென்னை புத்தகக் காட்சி வாசிப்பு விழிப்புணர்வு நடைபயனம் சென்னை நந்தனம் சிக்னல் ஆவின் பாலகத்தில் இருந்து ஆரம்பித்து, ஓய்.எம்.சி.ஏ. மைதானம் வரை விழிப்புணர்வு நடைப்பயிற்சி மேற்கொண்டனர். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் ஆர். பிரியா, நக்கீரன் ஆசிரியர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள் என கலந்துகொண்டு வாசிப்பு விழிப்புணர்வு நடபயனம் மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “சென்னை புத்தகக்கண்காட்சியில் கடந்த ஆண்டை விட, இந்தாண்டு அரங்குகள் அதிகரித்துள்ளது. அது நமக்கு எதைக்காட்டுகிறது என்றால் அதிகமான எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசிப்பாளர்களையும் கூடுதலாக கிடைத்துள்ளார்கள் என்பதையே காட்டுகிறது. இது போன்ற வாசிப்பு எழுத்தும் நல்ல மனிதர்களையும் மாண்பையும் மாணவர்களுக்கு வளர்த்தெடுக்கும்.
மருத்துவமனையில் அண்ணாவின் அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் தயாராக இருந்த சூழ்நிலையில், அந்த மருத்துவரிடம் அறுவை சிகிச்சை சற்று காலத்தை தள்ளி வைக்க முடியுமா என்று அண்ணா கேட்டுள்ளார். ஏன் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, நான் ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டு இருக்கிறேன் சிகிச்சையின் போது ஏதாவது நடந்துவிட்டால் என்னுடைய இந்த புத்தகவாசிப்பு பாதி நிறைவு பெறாமலே போய்விடும். எனக்கும் நிறைவேறாத ஆசையாக போய்விடும் என்று கூறி புத்தகத்தின் வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பிறகு அதே வழியில் கலைஞர்; தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். அதற்குச்சான்று இந்த நிகழ்வு” என்றார்.
இதே போல வருகின்ற 27 தேதி அன்று 48 ஆவது சென்னைப் புத்தகக்காட்சி நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாலை 4.30 மணி அளவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைக்கவுள்ளனர். இந்த புத்தகக்காட்சி டிசம்பர் 27 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகக்காட்சி பிற்பகல் 2 மணி தொடங்கப்பட்டு இரவு 8.30 வரை நடைபெறும். விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 8.30 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.