Skip to main content

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது...

Published on 01/07/2020 | Edited on 01/07/2020

 

cuddalore district

 

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே உள்ள வெள்ள கேட் கடைத் தெரு பகுதியில் ஒரு தனியார் ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தில் சமீபத்தில் பணம் நிரப்பப்பட்டது. இந்த நிலையில் சில மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததை கண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வுசெய்து அதன் அடிப்படையில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அதில் முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த காட்சி பதிவாகியிருந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் பண்ருட்டி டிஎஸ்பி பாபு பிரசாந்த் தலைமையிலான தனிக்குழு அமைத்து, சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வன், தனிப்பிரிவு காவலர் ராமச்சந்திரன், காவலர் முரளி ஆகியோர் மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வந்தனர். முகமூடி அணிந்திருந்த காட்சிகளை கொண்டு நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் உள்ள பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களுடன் கணினி மூலம் முகமூடி அணிந்தவர்களை ஆய்வு செய்து பார்க்கப்பட்டது. இதன் மூலம் மேற்படி நபர்கள் இருவரையும் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நெல்லிக்குப்பம் அருகே உள்ள எய்தனூர் பகுதியை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரது மகன் 25 வயது விக்கி என்கிற விக்னேஸ்வரன், இவரது நண்பர் கடலூர் வண்டி பாளையத்தை சேர்ந்த அருள் என்பவரும் இந்தக் கொள்ளைசம்பவத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டனர்.

மேலும் விசாரணையில் விக்கி என்கிற விக்னேஸ்வரன் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கடலூர் நெல்லிக்குப்பம் பண்ருட்டி சென்னை உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருசக்கர வாகனம் திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளை பண்ருட்டி காவல் நிலையத்தில் பாலியல் பலாத்கார வழக்கு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது. மேலும் விக்னேஸ்வரன் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் இருந்து விட்டு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு விடுதலை ஆனவர். இதுகுறித்த வழக்கும் விசாரணையில் உள்ளது.

விக்னேஸ்வரனை கைது செய்து நீதிமன்றம் மூலம் சிறையில் அடைத்தனர். ஏடிஎம் மையம் இயந்திரத்தை கொள்ளையடிக்க பயன்படுத்திய கடப்பாரை உள்ளிட்ட இரும்பு ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த அருள் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளை முயற்சி நடந்த 24 மணி நேரத்தில் ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையன் விக்னேஸ்வரனை போலீஸார் கைது செய்துள்ளது பாராட்டுக்குரியது என்கிறார்கள் அதிகாரிகளும், பொதுமக்களும்.

 

சார்ந்த செய்திகள்