தேசிய அளவில் தெலுங்கானா, மஹராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, ஒடிஸா, சிக்கீம் போன்ற மாநிலங்களில் மஞ்சள் அதிகமாக பயிரிடப்படுகிறது. இம்மாநில மஞ்சள் விவசாயிகள், வியாபாரிகளை உள்ளிடக்கி, மஞ்சளை லாபகரமான விளை பொருளாக மாற்றுவது தொடர்பாக, இந்திய நறுமண பொருட்கள் வாரியம் சார்பில், ‘மஞ்சள் சிறப்பு பணிக்குழு’ உருவாக்கப்பட்டுள்ளது.
அதில், தேசிய அளவில் உயர் அதிகாரிகள், வேளாண் பல்கலை கழக துணை வேந்தர்கள், மஞ்சள் வியாபாரிகள், விவசாயிகள் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மஞ்சள் சிறப்பு பணிக்குழுவின் முதல் அறிமுக கூட்டம், கடந்த, 16ல் நிஜாமாபாத்தில் நடந்தது. அக்கூட்டத்தில் பங்கேற்ற, இக்குழு பிரதிநிதியும் ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளருமான சங்க செயலாளர் சத்தியமூர்த்தி விளக்கமாக கூறும் போது "இந்திய நறுமண பொருட்கள் வாரிய உயரதிகாரிகள், நிஜாமாபாத் எம்.பி., மற்றும் பல்வேறு மாநில மஞ்சள் வியாபாரிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றோம். விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தரப்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக, இந்திய நறுமண பொருட்கள் வாரியத்தில் பல்வேறு பொருட்கள் உள்ளதால், மஞ்சளுக்கு தனி முக்கியத்துவம் கிடைக்கவில்லை. எனவே, மஞ்சளுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். இதற்கான தலைமை அலுவலகம் நிஜாமாபாத்தில் அமைந்தாலும், தமிழகத்தில் மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனையில் பிரதான இடம் வகிக்கும் ஈரோட்டில், மண்டல அலுவலகம் செயல்பட வேண்டும்.
மஞ்சளுக்கு மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலையாக, குவிண்டாலுக்கு 9,000 ரூபாய் என அறிவிக்க வேண்டும். அப்போதுதான் வெளி மார்க்கெட்டில் மஞ்சளுக்கான விலை உயரும்.மஞ்சள் சாகுபடியில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை அதில் இணைந்து பணி செய்ய உத்தரவிட வேண்டும்.
மஞ்சள் வர்த்தகத்தில் உள்ள, 5 சதவீத ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும். மருத்துவ பயன்பாட்டில் மஞ்சளுக்கு முக்கியத்துவம் இருந்தாலும், அதனை விரிவாக்கம் செய்ய வேண்டும். இயற்கை ரீதியாக மஞ்சளை தரமாகவும், கூடுதல் மகசூல் கிடைக்கும் வகையில் வளர்க்க, ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். புதிய ரக மஞ்சளை உருவாக்க வேண்டும், என கேட்டுள்ளோம்." என்றார்.