ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டி பல்வேறு பிரிவுகளில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 5 நாட்கள் வரை நடக்கிறது. இந்த போட்டியில் 18 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் 93 கிலோ எடை மாஸ்டர் பிரிவில் தமிழகத்திலிருந்து கலந்து கொள்ளும் ஒரே வீரர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மின்வாரிய ஊழியரான ரவிச்சந்திரன் தான்.
போட்டியில் கலந்துகொள்ளப் புறப்பட்ட ரவிச்சந்திரனை அவரது நண்பர்கள், அவரது மாணவர்கள், போக்குவரத்து காவலர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் நேரில் வந்து மாலை அணிவித்து வாழ்த்துக் கூறி வழி அனுப்பி வைத்தனர். மாலை அணிவித்ததுடன் இந்தியத் தேசியக் கொடியை ஏந்திய ரவிச்சந்திரனை சக மாணவர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடி போட்டியில் வெற்றி பெற வாழ்த்தினார்கள்.
93 கிலோ எடைப்பிரிவில் தமிழகத்திலிருந்து நான் ஒருவரே கலந்து கொள்கிறேன். இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்று பதக்கம் பெற்று இந்த நாட்டுக்கும், தமிழகத்திற்கும், சொந்த ஊருக்கும் பெருமை தேடித்தருவேன். தமிழக முதலமைச்சரும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்ய நாதனும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.