Skip to main content

ஆம்ஸ்ட்ராங் படுகொலை; பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Armstrong incident Bahujan Samaj party struggle

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் வீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் வந்ததுள்ளது. இந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Armstrong incident Bahujan Samaj party struggle

கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த சென்னை கூடுதல் காவல் ஆனையர் அஸ்ரா கார்க் காரை பகுஜன் சமாஜ் கட்சியினர் வழிமறித்து போராட்டம் நடத்தினர். 

Armstrong incident Bahujan Samaj party struggle

மேலும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வெளியே அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இயக்குநர் பா. ரஞ்சித் கதறி அழுதது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்