தமிழ்நாட்டில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர் வாரப்பட்டதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் வேளாண் சாகுபடி பரப்பு 7 லட்சம் ஏக்கர் அதிகரித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழா தலைவாசலில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர், "தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு, பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு' என்று எம்ஜிஆர் பாடிய பாடலுக்கு ஏற்ப, கால்நடை வளர்ப்பு என்பது வேளாண் மக்களின் வாழ்வுக்கும், பொருளதாரத்திற்கும் மிக அவசியமானது.
தமிழகம், நீடித்த நிலையான வளர்ச்சி அடைய, கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றுவது அவசியம். கால்நடை வளர்ப்பை அதிகரிப்பதுடன், வேளாண் மக்களின் வருமானமும் உயர வேண்டும். அதற்காகத்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை, 96944 பயனாளிகளுக்கு 357.05 கோடி மதிப்பில் கறவை மாடுகளும், 1473 கோடி மதிப்பில் 11 லட்சத்து 40430 பேருக்கு 4561720 வெள்ளாடு, செம்மறி ஆடுகளும் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு வழங்கப்பட்ட கால்நடைகள் மூலம் கறவை 1.98 லட்சம் கன்றுகளும், 78.13 லட்சம் ஆட்டுக்குட்டிகளும் பெருகி உள்ளன. இதனால் பயனாளிகளின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து உள்ளது.
20வது கால்நடை கணக்கெடுப்பின்படி, வெள்ளாடுகளின் எண்ணிக்கை முன்பை விட இப்போது 21 சதவீதம் அதிகரித்துள்ளது. கோழியின எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்திலும், செம்மறி ஆடு எண்ணிக்கையில் 5வது இடத்தையும், வெள்ளாடு வளர்ப்பில் 7வது இடத்தையும் பிடித்துள்ளது.
கால்நடை வளர்ப்பில் ஏற்பட்ட இந்த வளர்ச்சியை, மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், இந்த கால்நடைப் பூங்கா திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. நான் அண்மையில் அமெரிக்கா சென்றபோது, பஃபலோ நகரில் உள்ள பெரிய கால்நடை பண்ணையை பார்வையிட்டு, அங்கு கடைப்பிடிக்கப்படும் அதிநவீன உத்திகளை கண்டறிந்து, இந்த கால்நடைப் பூங்காவில் அவற்றை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். கால்நடை வளர்ப்பில் உள்ள நவீன தொழில்நுட்பங்ளை அறிந்து வர கால்நடைத்துறை அமைச்சர், துறை அதிகாரிகளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி, அறிந்து வரச் செய்திருக்கிறேன்.
கால்நடைகள், கோழிகள் வளர்ப்புத் திட்டங்களால் கிராமப் பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. வறுமை இல்லா நிலையை அடைவதில், நாட்டிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது.
'கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி' என்ற எம்ஜிஆர் பாடலுக்கு ஏற்ப, விவசாயிகளை பாதுகாத்திட, ஏரிகளை தூர்வாரி பராமரித்து, நீரின் கொள்ளளவை உயர்த்தியும், காவிரியில் கடைமடை வரை வாய்க்கால்களை தூர் வாரி, நீர் கொண்டு சென்ற காரணத்தாலும், வேளாண் சாகுபடி பரப்பு நடப்பு ஆண்டில் 7 லட்சம் ஏக்கர் கூடுதலாக பயிர் செய்யப்பட்டு உள்ளது. நானும் ஒரு விவசாயி என்பதால், வேளாண் மக்களின் பிரச்னைகளையும், தேவைகளையும் உணர்ந்து பல்வேறு நடவடிக்கைள் எடுத்து வருகிறேன்.
வறட்சி நிவாரணமாக 2247 கோடி ரூபாய், 90 லட்சம் விவசாயிகளுக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நாட்டிலேயே சாதனை அளவாக 7528 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது.
சேலம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கடலூர், திருவண்ணாமலை, தேனி, மதுரை, விழுப்புரம் ஆகிய எட்டு மாவட்டங்களில் 217 கோடி ரூபாயில் உணவுப்பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றின் மூலம் விளை பொருள்களை பதப்படுத்தி பாதுகாக்க முடியும் என்பதோடு, அவற்றுக்கு உரிய விலையும் கிடை க்கும்.
விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் இந்த அரசு, ஒரு மைல் கல்லாக வேளாண் பெருமக்களுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும், மீனவர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இங்கே உலகத்தரத்தில் 1023 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன கால்நடைப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். இந்த கால்நடைப் பூங்கா 1100 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. மூன்று பிரிவுகளாக இந்த பூங்கா கட்டமைக்கப்படும்.
முதல் பிரிவில், நவீன கால்நடை மருத்துவமனை, கறவை மாட்டுப்பண்ணை அமைக்கப்படும். காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம், பர்கூர் உள்ளிட்ட நாட்டின மாடுகள் பாதுகாப்பு, இனப்பெருக்க பண்ணையும், ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகிய நாட்டு நாய் இனங்களின் இனப்பெருக்க பிரிவுகளும் இயங்கும். இந்த வளாகத்திற்கான தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்திட, 262.16 கோடி ரூபாய் மதிப்பில் 11 எம்எல்டி தண்ணீரை மேட்டூர் அணையில் இருந்து கொண்டு வந்து, விநியோகம் செய்யப்படும்" என தெரிவித்தார்.
இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் அமைச்சர்கள், அரசுத்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.