Skip to main content

“வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

nn

 

சென்னை கிண்டியில் டி.எஸ். சீனிவாசன் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் மேடையில் முதல்வர் பேசுகையில், ''பேருந்தை இயக்குவது, அதற்கான பாகங்களை தயாரிப்பது, வாகனங்களை உருவாக்குவது எனக் கிளை தொழில் எல்லாவற்றையும் தொடங்கியதால் இன்று 80 நாடுகளில் டிவிஎஸ் நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய மாபெரும் மனிதர் தன்னுடைய வாரிசுகள் எல்லோரையும் தொழில்துறையில் ஈடுபடுத்தி வளர்த்திருக்கிறார். தாத்தா, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என டிவிஎஸ் என்ற மூன்றெழுத்தை காப்பாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

 

டி.வி.சுந்தரம் போலவே அவரது மகன் சீனிவாசன் தொழிலில் புதுமைகளை பதித்து விரிவுபடுத்தினார். சீனிவாசனுடைய மகன் வேணு சீனிவாசனும் இதை இன்னும் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் காப்பாற்றலாம். அதற்கு அடையாளமாக டிவிஎஸ் நிறுவனம் உயர்ந்து நிற்கிறது. வாரிசு என சொல்வதால் ஏதோ அரசியல் பேசுவதாக நினைக்கத் தேவையில்லை. வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் திறமையாக செய்து வெற்றிக் கொடி நாட்டலாம் என்றுதான் சொன்னேன்.

 

nn

 

நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகின்ற சீனிவாசன் இந்த டி.வி.எஸ் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றியவர். தொழிலதிபர்களில் பல வகை உண்டு. சிலருக்கு நிர்வாகத் திறன் இருக்கும். சிலருக்கு தொழில்நுட்ப அறிவு அதிகமாக இருக்கும். சிலர் நேரங்காலம் பார்க்காமல் உழைப்பார்கள். சிலர் தொழிலாளர்களே முக்கியம் என நினைப்பார்கள். இவை அனைத்தையும் ஒருசேரப் பெற்றவராக டி.வி.எஸ். சீனிவாசன் இருந்தார். இதுதான் அவருடைய வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்