தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,859 பேருக்கு கரோனா செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் இதுவரை மொத்தமாக கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை என்பது 25,55,664 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 68 நாட்களாக கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 103 ஆக பாதிப்பு அதிகரித்தது. அதேபோல் நேற்று சென்னையில் மேலும் 181 பேருக்கு கரோனா உறுதியாகியது. சென்னையில் ஏற்கனவே நேற்று முன்தினம் 164 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 3வது நாளாக சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்தது.
இந்நிலையில் தளர்வுகள் அளித்தால் மக்கள் அதிகமாக கூடுகின்றனர் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார். ''கரோனா பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தளர்வுகள் அளித்தால் உடனே மக்கள் கூடி விடுகின்றனர். அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் அலட்சியப் படுத்துகின்றனர். இதுபோன்ற நேரத்தில் தனியார் மருத்துவமனைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என தெரிவித்திருந்த நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் கொடுக்கலாமா என்பது குறித்து இன்று ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில் மேலும் ஒருவாரம் (அடுத்த மாதம் 9 ஆம் தேதி வரை) தற்பொழுதுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக எந்த தளர்வுகளும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மக்கள் அதிகம் கூடுவதாக தெரிந்தால் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசார் அந்த பகுதியை மக்கள் நலன் கருதி அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.